புயல் கவிதை தொகுப்பு – 28
சமீபத்தில் மக்களை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் இரக்கமில்லா புயல் சீற்றம் பற்றிய கவிதைகள் தொகுப்பின் வாயிலாக கவிஞர் “ஆண்டாள் பிரசன்னா, கோவை” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். மேலும் கவிஞர்கள் “பாலாஜி போளூர்“, “குடைக்குள் மழை சலீம்“, “ஜாகிர்உசேன் கோவை” மற்றும் “தீனா நாச்சியார்” ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன – puyal kavithai hoguppu.
புயல் எனும் தூதுவன்
பாலைக்கும் சோலைக்கும்
வளங்களை வாரி கொடுக்கும்
இனிய தூதுவன் இந்த புயல்
சகாராவின் மேற்பரப்பில் தோன்றும்
சத்துமிக்க கனிமங்கள்
பருவ காலங்களில் வரும்
பாலைப்புயல்களால் கடத்தப்பட்டு…..
அமேசான் காடுகளுக்கு உயிரூட்டும்
அரும்பெரும் நிகழ்வுகள் பாலைப்புயல்….
சுழல்கின்ற பூமிக்கும்
சுழன்றடிக்கும் தீவிர காற்றுக்கும்
சுற்றமும் நட்பும் மிகுதியாகச்
சூழ்ந்திருக்கும் இவ்வுலகில்….
நீரில் சுழன்றடிக்கும் “நிவர்”ரைப்
போன்ற புயல்களால்
நெடுந்தூர நிலங்களும்
நீர் வளம் பெற்று விடும்…
வளிமண்டலத்தில் உருவாகி வலுப்பெற்று
புவி மண்டலத்தின் மீது மோதி
புதியவளங்களை உருவாக்குகின்ற
வான் அளிக்கும் வன் கொடையே புயல்….
அது ஏற்படுத்தும் அழிவுகளை கணக்கில் எடுத்தால்
அதன் ஆக்கங்களின் அருகில் நெருங்கா….
புயல்களால் ஏற்படுவது அழிவுகளல்ல
அதைப்
புரிந்து கொள்ளாததால் வருவதே அழிவுகள்…
ஆழ்கடலின் ஓட்டத்தை
நேர்படுத்தி சீரமைக்கும்
அரும்பெரும் நிகழ்வுதான் புயல் – puyal kavithai hoguppu
கரையோடு உறவாடி
அலையாக விளையாடும்
அழகாய் அதிசயமாய்க் காட்சி தரும் கடல்
எல்லை தாண்டி எழுந்தோடிவராமல்
இருக்கச் செய்யும் ஏற்பாடுதான் புயல்…
அழிவு அழிவு என்று
அறைகூவும் மானிடரே
இயற்கையின் விளைவுகளில்
அழிவுகள் இல்லை
இயற்கையிடம் அத்துமீறும்
விளைவுகளில் தான் அழிவுகள் உண்டு….
சிந்தனைக்கு பாடைகட்டி
அறிவுக்கு ஆரத்தி எடுக்கும்
அலங்கோலம் இந்த மனிதரிடம் மட்டும்தான்…
ஆறாம் அறிவைத் தேறாத வகையில்
உபயோகப்படுத்தி
ஐந்தறிவிடம் தோற்றுக் கொண்டிருக்கும்
அவல நிலையை எய்தும் மானிடர்கள்…..!
– ஜாகிர்உசேன் கோவை
புயல்
கடல்கொதித்து உள்வாங்கி
காற்றோடு சண்டை யிட்டு
திடல்நிரப்பி போனதடா
தீராத பெரும்புயலால்….!
ஏரிகுளம் அத்தனையும்
எழில்நிறைந்த கட்டிடங்கள்
பாவித்த காரணத்தால்
படையெடுத்த பெருவெள்ளம்…
பட்டினத்தில் குடியேறி
பாழ்படுத்தி வருவதனால்…
சிங்கார சென்னையின்று
சிதையுண்டு போனதடா…!
சாதிமத பேதனையால்
சண்டையிட்டு கிடக்கின்ற
போதைநிலை மாறும்வரை
பேய்க்காற்று சாத்தியமே..!
– குடைக்குள் மழை சலீம்
இரக்கமில்லா இயற்கை சீற்றம்
கொரணா கொண்டு வந்த
ரணங்களை வாரி எடுத்து
நிவர்த்திக்க வருவாயோ – நிவர் புயலே? ….
நிவரே…
நீயே … நி வாரணப்புயலும் ஆவாயோ?
கடந்து செல் கடிதில் நீயே!
காத்துக்கிடக்க வைக்காமலே..
தாமதம் தான் புயலே …
நினக்கேதான்… தகுமோ…
நி.. வா – ரணப்புயலா? வாரணப்புயலா?
வாரணம்என்றால் யானை
பலம் கொண்டவன்
நீ எனவும் ஆகிறதே?
நிவர் –
நீ – யார்?
பகர்வாயோ? எமக்கே!
– ஆண்டாள் பிரசன்னா, கோவை
மழையே வா
வானத்து மாமழையே
வந்தால் நீ பேரழகே
புயலோடு மழையென
பூமி மீது படையெடுத்தாய்
புரியாத புதிராக
புதியதாய் நீ செரிந்தாய்
இடியோடு மின்னலுமாய்
இருட்டிலே பெய்திட்டாய் – puyal kavithai hoguppu
சாரலாய் பூவென
மாரியாய் தூறிட்டாய்
இதமான குளிரோடு
இரவில் நீ வந்தாலும்
வசந்தமாய் இன்று
வைகறையில் வந்திட்டாய்
கதிரவன் உதிக்கும்முன்
கழநி போகணும்
காளைகள் காத்திருக்கு
பாரமேற்றும் வண்டியுடன்
உதிர்த்த நெல்மணியை
காசாக்க கடைவீதிக்கு
துரிதமாய் போகவேணும்
வழி கொடு நீ எனக்கு
– கவிஞர் பாலாஜி, போளூர்
புயல்
காற்றழுத்தத் தாழ்வாகி
கடல் மீது உருவாகி
கண்ணீரில் மிதக்க விட்டு
கடும் காற்றோடு மழையேந்தி
கடல் கடந்து கரையேறி
கண்ணில் படும் யாவையும்
காற்றோடு பறக்கவிட்டு
கானலென மறைந்த பின்னும்
காடு களனி யாவும்
காயங்கொண்டு
கள(வா/மா)டிச் செல்லும்
களவாணி இவனோ…
– தீனா நாச்சியார்
புயல்
இலைவிரித்து நடனமிடும் இனிதான பூங்காற்று
தலைவிரித்து ஆடியதால்…
தலைப்பெழுத்தில் இடம்பிடிக்க..
கொலைநடுங்க வைத்ததடா..
கொந்தளிக்கும் பெரு நிவராய்
– குடைக்குள் மழை சலீம்
கவி படைத்த அனைத்து கவிஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்… கவிதைகள் அனைத்தும் அருமை. வாழ்த்துகள்
திட்டமிடுதல் என்பது இயற்கையை
தீண்டி விடாமல் இருக்க வேண்டும்
ஒரு விதத்தில் அதைத் தீண்டினால்
மறு விதத்தில் அது தண்டிக்கும்
அதை அழகாகச் சொல்கிறார்
குடைக்குள் மழை சலீம்
புயல் என்ற பெயரில்
சுழன்றடித்து புரட்டி மிரட்டி உருட்டி சுருட்டிச் செல்லும் புயலும் கூட நின்று நிதானித்து யோசிக்க வைத்துவிடும் ஆண்டாள் பிரசன்னா அவர்களின் சொற்களின் அழகிலும் பொருளைத்தேடியும்
புயலினால் இத்தனை நன்மைகளா..இதுவரை அறியாதது..அனைத்து கவிகளின் கவிதைகளும் அருமை…இனிமை..சர்க்கரை பந்தலில் தேன்மாரி பெய்த்து போல..வாழ்த்துகள்
மழைக்கும் சம்சாரிக்கும் உள்ள
சுகமான உறவையும் சுற்றிவரும் தோழமையையும் சிறப்பாக உரைக்கிறார்
போளூர் பாலாஜி
அன்றாடப் பணிகளைக் கூட மழையிடம் அளவளாவிச் செல்லும் அளவுக்கு தோழமை இருக்கிறது என்பதை
இரு நண்பர்கள் பேசிக் கொள்வதைப் போல இவர் அழகாக எடுத்துரைக்கிறார்
களவாணி தான் ஆனால்
காணாமல் எடுக்கும் களவாணி அல்ல
தேவை யானதை கொடுத்து தேவையில்லாதவை எடுத்துச்செல்லும்
கண்முன்னே உருவாகி காணாமல் கரைந்து போகும் களவாணிப்பயலே
இந்த புயலாகும்
நாச்சியாரின் வர்ணனையில்
நச்சென்று வாழ்த்தின் வசவு அருமை
கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன
amazing poems good keep it up 👏👏