மகாகவி சுப்ரமணிய பாரதி – பிறந்தநாள் கவிதை

எந்தன் முண்டாசுக்கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம், பாரதி பிறந்த தின சிந்தனைச்சிதறல்கள் – mahakavi subramaniya bharathi.

சகாக்களிடம் ஈர மனம் காட்டாத
மானுடம் மத்தியில் சிட்டுக்குருவிக்கும்
நிழல் தந்தாய்.

காக்கை குருவி பசி விருந்தாய்
தன் பசி மறந்தாய்.
தன் இனம் தமிழ் இனம் என்றாய்!

உன்னிடம் வீண்
சம்பிரதாயங்கள் சவுக்கடி வாங்கியது !
மீசை வீரத்தின் அடையாளம் பேசியது.

பெண் இனம் பெருமை கொண்டது,
புதுமைப்பெண் அவதரித்தாள்.

வரிகளில் வீரத்தை விதைத்தாய்,
நின் பாட்டில் பாரதம் திரண்டது.

நின்றன் கவிதை தொகுப்பு
இக்கால பாடல்களின் கருவாகியது.

தமிழ் உள்ளவரை
வீரம் உள்ளவரை
மனித மனதில் ஈரம் உள்ளவரை
நின் புகழ் நிலைக்கும் – நீடிக்கும்.

– நீரோடை மகேஷ்


பாரதி பிறந்த தின சிந்தனைச்சிதறல்கள்

அகிலம் போற்றும்
அதிசயக்கவிஞனின் கவிப்பரிச்சயம்
நமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம்
மனமினிக்கும் சுகானுபவம்! – mahakavi subramaniya bharathi

அரிய இப்புலவனின்
சீரிய தனித்தன்மைகளை
இப்புவியறிய எடுத்தியம்பி விழைகிறேன்!

சமுதாயம் சீர் திருந்த பாப்பா பாட்டு
ஆழ்ந்த சமய கருக்கொண்ட
கண்ணன் பாட்டு
நன்னிலமாம் தாய்நாடு
தன் விண்ணுயர் பெருமை பாடி
அன்னியரின் அதிகாரக்கண்ணில்
ஊசி ஏற்றிய தேசீயப்பாட்டு

அச்சமில்லை அச்சமில்லையென
இச்சகத்திற்கெதிராக முழங்க ஏவிய – புரட்சிக்காரன்!

தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்
இனிய கொள்கை ஏந்திய சமத்துவ வாதி!

சாதிகள் இல்லையடி பாப்பா …
ஓங்கிக் குரல் கொடுத்த சமதர்மவாதி!

புதுமைப்பெண் எனும்
புதுப்பதம் படைத்து… அவனியில்
பதுமை யென வாழ்ந்த, மாதர் தம்மை
தலை நிமிரச்செய்த சமூக வாதி!

தேனனைய தமிழ் என எங்கும்
பாடிய இவன்
சுந்தர தெலுங்கு என பண்பாடினான்…
நம் மண் நலன் கருதி
பரந்த மனம் காணீர் !
பாரத பூமி பழம்பெரும் பூமி,

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என
பாடி நாட்டுமக்களை
கூடி வாழ்ந்திட கூவி அழைத்தான்!

தன்னிகரற்ற தேசிய வாதி!
பதினான்கு மொழி கற்ற புலவன் யாரும்
உண்டோ இத்தரணியில்?

இரண்டு தலைமுறைகளில்
திரண்ட அறிவுடைத்த
சீடர்களைக்கொண்ட
கவிஞன் உண்டோ?
அவனியில் தேடியலைகிறேன் !!

கலைமகள் வசம் வந்த பின்,
திருமகள் பற்றி எண்ண முயலவில்லை!

அன்னியரின் அடி வருட வில்லை!
அதிகாரத்திற்கு சிரமம் தாழ்த்தி,
பணம், புகழ், பட்டம்
பெறும் எண்ணமில்லை!

இவன் தன்னிகரற்ற தமிழ்க்கவிஞன்!
தனித்துவம் பெற்ற புது மனிதன்!

கொப்பளிக்கும் எண்ண வெல்ல(ள்ள)ம்!
இட, நேர மின்மையினால்,
இப்போது தடை போடுகிறேன்! – mahakavi subramaniya bharathi

– பாரிஸா அன்சாரி

You may also like...

5 Responses

  1. சீனிவாசன் says:

    மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  2. Kavi devika says:

    அருமை…. பாரதியின் புகழ் நிலைக்கட்டும்… வாழ்த்துகள்

  3. Nachiyar says:

    வாழ்க வளமுடன்… கவி படைத்த கவிஞர்களுக்கு வாழ்த்துகள்

  4. R. Brinda says:

    பாரதியாரைப் பற்றிய செய்திகள் படிக்கும் போது நம்மை அறியாமல் மேனி சிலிர்த்து விடுகிறது.

  5. தி.வள்ளி says:

    முண்டாசு கவியின் பெருமை சொன்ன கவிதைகள் அருமை…கவிகளுக்கு வாழ்த்துகள்