சுமைதாங்கி பகுதி – 3 இன்பச்சுமை
அனுமாலா அவர்கள் எழுதிய சுமைதாங்கி கதையின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த உண்மை சம்பவத்தை தொடர்ச்சியாக (கற்பனையாக) மூன்றாவது பாகத்தை எழுதியுள்ளார் (கற்பனையில் கீதாவின் எதிர்கால வாழ்க்கை) – sumai thaangi tamil story 3 [பாகம் 2 ஐ வாசிக்க]
விதி வலியது என்று சொல்வார்கள் . கீதாவின் வாழ்வில் அது கொடியது ஆனது. அவளது வாழ்க்கை சீராக சந்தோஷமாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது. அவள் உலகமே பள்ளி , மாணவர்கள், பாட்டு, வீணை என்று ஒரு வட்டத்திற்குள் சுற்றிக்கொண்டிருந்தது . எந்த வித சலனமும் இல்லாமல் சென்ற வாழ்க்கையை,
சந்தோஷத்தை திருமணம் என்ற பெயரால் அழித்து விட்ட விதியை என்னவென்று சொல்வது! இல்லாமல் போன மண வாழ்க்கையை பற்றி நினைக்காத கீதாவுக்கு மூளை வளர்ச்சி இல்லாத குழந்தையையும்
கொடுத்து அவளை தண்டித்தது விதியா அல்லது இந்த சமுதாயமா?
தந்தையும் இறந்து விடவே, கீதாவிற்கும் அவளது தாய்க்கும் வாழ்க்கையே கசந்து போனது.
வேறு ஒரு வாழ்க்கை
கீதாவின் கூடப் பிறந்தவர்களும், அவளுடைய நலனில் அக்கறை கொண்ட நண்பர்களும், உறவினர்களும் பல வித யோசனைகளை கூறினர். மூளை வளர்ச்சி இல்லாத அவளுடைய குழந்தையை அதற்கான காப்பகத்தில் விட்டு விட்டு அவளுக்கென்று வேறு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுமாறு அனைவருமே கூறினர். அனால் கீதாவுக்கு அதில் உடன்பாடு இல்லை. தான் பெற்ற குழந்தையை எப்படியாவது காப்பாற்றி விடுவது என்ற மன உறுதியுடன் இருந்தாள் அவள்.
இனி ஒரு மணவாழ்க்கை தேவையில்லை
தனக்கென்று இனி ஒரு மணவாழ்க்கை தேவையில்லை. தனியாக அதே நேரத்தில் சந்தோஷமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை அவளிடத்தில் நிறையவே இருந்தது. ஆனால் இந்த உணர்வுகளையும் மீறி, அவளிடத்தில் ஒரு கோபமும் இருந்தது. தனது வாழ்க்கைப் போக்கு மாறியதற்குக் காரணம் விதி என்று நினைத்து மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்க கீதாவுக்கு விருப்பமில்லை. தன் வாழ்க்கையைக் கெடுத்தவனுக்கு எப்படியாவது சரியான தண்டனை கொடுக்க வேண்டும். தான் அனுபவித்த வலி அவனுக்கு ஏற்பட வேண்டும் அந்த காமுகன் மீண்டும் ஒரு பெண்ணைப் பற்றி நினைக்கக் கூடாது என்பன போன்ற யோசனைகளில் மூழ்கினாள் கீதா. அதற்கான வழியும் அவளுக்கு புலப் பட்டது.
ராமேஸ்வரன்
நாட்கள் ஓடின. கீதாவும் ஒரு இயந்திரம் போல் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருந்தாள். அந்த ஓட்டத்திற்க்கு இடையேயும் என்ன செய்ய வேண்டும் யோசனையும் தீராமல் தொடர்ந்து ஒரு திட்டமாக உருவாகியது. ஒரு
நாள் இரவு சாப்பிட்டு முடித்து விட்டு, குழந்தை பாலனையும் தூங்க வைத்த பிறகு அப்பாவின் டைரியை எடுத்தது புரட்டினாள். அதில், பாஸ்கரனின் அக்காவின் கணவர் ராமேஸ்வரனின் மொபைல் நம்பரை தேடி
எடுத்தாள். அந்த எண் இப்போது உபயோகத்தில் இல்லை என்பது தெரிய வர, அவர் வேலை செய்யும் வங்கியின் தனது ஊர் கிளைக்கு செல்ல திட்டமிட்டாள்.
அடுத்த நாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு ராமேஸ்வரன் வேலை செய்யும் வங்கியின் கிளைக்கு சென்றாள். அங்கு அவளிடம் டியூஷன் படிக்கும் ஒரு மாணவியின் தாயார் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் சென்று ராமேஸ்வரனின் விபரங்களைக் கூறி அவர் இப்போது எந்த
கிளையில் வேலை செய்கிறார், மற்றும் அந்த கிளையின் போன் நம்பர் போன்ற விபரங்களைக் கேட்டறிந்தது கொண்டாள். வீட்டிற்கு வந்த கீதா, அவரது வங்கிக்கு போன் செய்து அவரிடம் பேசினாள். அவரது கைபேசி எண்ணையும் கேட்டு வாங்கி கொண்டாள். இரவு ஏழு மணிக்கு மேல் அவருடன் பேசுவதாகவும் கூறினாள்.
அனு கீதாவைப் பற்றி நிறைய பேசுவாள்
இரவு ஏழு மணிக்காக காத்திருந்த கீதா, சரியாக ஏழு மணி ஆனவுடன் அவரது கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டாள். அவருடன் பேசியதில், கீதாவிற்கு தன்னுடைய திட்டம் சீக்கிரமாக நடக்கும் என்ற நம்பிக்கை வந்தது. மைசூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராமேஸ்வனுக்கு தஞ்சாவூர் கிளைக்கு மாற்றலாகி இருந்தது. அதனால் அவர் மாதம் ஒரு முறையோ இரு முறையோ சென்னைக்கு சென்று அனுவை பார்க்க முடிந்தது. ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் அனு எப்பொழுதும் கீதாவைப் பற்றி நிறைய
பேசுவாள் என்பதை அவர் மூலம் அறிந்து கொண்டாள் – sumai thaangi tamil story 3.
உடைந்து அழுதே விட்டாள்
தொலை பேசியில் பேசிய பொழுது ராமேஸ்வரன் இவை அனைத்தையும் விபரமாக கீதாவிடம் கூறினார். பேச்சினிடைய கீதாவின் தந்தையைப் பற்றியும், குழந்தையைப் பற்றியும் அவர் விசாரித்தார். அந்த கேள்வியில் இருந்த அன்பில் கீதா உடைந்து அழுதே விட்டாள். தனது தந்தை அதிர்ச்சியால் இறந்து ஒரு வருடம் ஆகி விட்டது என்று கூறிவிட்டு, தனது குழந்தையின் குறையை பற்றியும் கூறினாள். அது கேட்ட ராமேஸ்வரன் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் வாயடைத்துப் போனார். சில நிமிடங்களிலேயே தன்னை தேற்றிக் கொண்ட கீதா, ராமேஸ்வரனிடம், “சார், நான் உங்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டும். நீங்கள் எனது வீட்டிற்கு வர முடியுமா?” என்று கேட்டாள்.
தனியாக பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது
அந்த வார கடைசியில் தான் அனுவைப் பார்க்க சென்னை செல்வதாகவும், அவளுக்கு பள்ளி விடுமுறை வருவதால் அவளை தன்னுடன் இருப்பதற்காக கூட்டி வரப்போவதாக கூறினார். மேலும் முடிந்தால் அனுவையும் அழைத்துக் கொண்டு கீதாவின் வீட்டிற்கு வருவதாகக் கூறினார். வீட்டிற்கு வரும் முன்பு
போன் செய்வதாகவும் கூறினார். அவர் கூறிய அந்த நாளும் வந்தது. அனுவும் ராமேஸ்வரனும் கீதாவின் வீட்டிற்கு வந்தனர். அவர்களை பார்த்ததில் கீதாவிற்கும் அவள் தாய்க்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. சற்று நேரம் பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டே சிற்றுண்டியும் காபியும் அருந்தினர். அதன் பின்னர், அனு கீதாவின் அம்மாவிடம் ஒட்டிக்கொண்டு உள்ளே ஓடினாள். ராமேஸ்வரனும் கீதாவும் தனியாக பேசுவதற்கு சந்தர்ப்பம்
கிடைத்தது.
அனுவின் அம்மாவை விவாக ரத்து
“ஏதோ பேசவேண்டும் என்று கூறினீர்களே” என்று ஆரம்பித்தார் ராமேஸ்வரன். “நான் உங்களை இங்கு வரவழைத்ததன் காரணத்தை சொல்வதற்கு முன்னால், நான் நீங்கள் அனுமதித்தால் உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். அதற்கு நீங்கள் கூறும் பதில்களைப் பொறுத்துத்தான் நான் மேலே
என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானித்து அது குறித்து உங்களிடம் விரிவாக பேச முடியும். நீங்கள் இன்னும் அந்த வீட்டிற்கு பொருளுதவி செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதற்கான காரணம் அனுதான் என்று புரிந்தாலும் நீங்கள் ஏன் அவளை அங்கிருந்து வெளியே கொண்டு வரவோ அல்லது அனுவின் அம்மாவை விவாக ரத்து செய்யவோ முன் வரவில்லை என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?” – கீதா.
பொறுப்பற்றவன்
“நான் என் பெற்றோருக்கு ஒரே மகன். அப்பா ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து என்னை படிக்க வைத்தார். நான் இந்த வங்கியில் வேலைக்கு அமர்ந்த பிறகு எனக்கு என் பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஈஸ்வரி, அனுவின் அம்மா எல்லாரிடமும் நன்கு பழகி எங்கள் குடும்பத்தினர் அனைவரிடமும் மிக நல்ல பெயரை எடுத்து ஒற்றுமையாகத்தான் இருந்தாள். அவளுடைய சிறிய வயதிலேயே தந்தையை இழந்துவிட்டாள். உறவு என்று சொல்லிக் கொள்ள அவளுடைய தாயாரும் தம்பியும் மட்டும்தான். எங்கள் திருமணத்தின்போது
அவளது தம்பி பாஸ்கர் காலேஜில் படிப்பதாக கூறினார்கள். பிறகு ஏதோ வேலைக்கு செல்வதாக கூறினார்கள். ஆனால் அவன் எந்த வேலையிலும் நிலையாக தொடர்ந்து இருக்கவில்லை. ஊரை சுற்றி வருவான் பொறுப்பற்றவன். அனால் தன்னிடம் மட்டும் மிகுந்த பாசமாக இருப்பதாக சொல்வாள் ஈஸ்வரி – sumai thaangi tamil story 3.
பிரசவத்திற்க்கென்று தாய் வீடு சென்றவள்
அவள் திருமணமாகி வரும் பொழுது அவன் மிகவும் உடைந்து போனான் என்று கூறினாள். அதனால் அடிக்கடி ஈஸ்வரியை பார்க்க அவன் எங்கள் வீட்டிற்கு வருவான். அவன் வரும் பொழுதெல்லாம் ஈஸ்வரி பணம் கொடுத்தது அனுப்புவாள். பிரசவத்திற்க்கென்று தாய் வீடு சென்ற ஈஸ்வரி, குழந்தை பிறந்த
பின்னரும் கூட எங்கள் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. ஏதேதோ காரணங்களை கூறி அங்கேயே தங்கிவிட்டாள். நான் எப்போது அவளை அழைத்தாலும், ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி தட்டி கழித்துக் கொண்டே வந்தாள். இதனிடையே அவள் தாயும் இறந்து விட்டாள். அவ்வப்பொழுது பணம் மட்டும் என்னிடம் கேட்பாள். நானும் கொடுப்பேன். நான் அவர்கள் வீட்டிற்கு குழந்தையை பார்க்க
செல்லும் பொழுதெல்லாம் பாஸ்கர் வீட்டிலேயேதான் இருப்பான். அப்போதுதான் நான் அவனுக்கு வேலை எதுவுமே இல்லை என்பதை தெரிந்துகொண்டேன். என்னிடம் குழந்தைக்கு செலவு என்பதை காரணம்
காட்டி அதிகம் பணம் கேட்க தொடங்கினாள்.
முறையற்ற உறவு பற்றி அறிந்துகொண்டேன்
எனக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி விடவே, அங்கிருந்து புறப்படும் பொழுது என்னுடன் வந்துவிடுமாறு அழைத்தேன். தம்பியை தனியாக விட முடியாது என்று கூறி தட்டிக் கழித்தாள். பாஸ்கருக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லாததால் அவனையும் எங்களுடன் அழைத்து சென்று விடலாம் என்று
கூறினேன். அதையும் அவள் மறுத்து விட்டாள். ஒரு முறை முன்னறிவிப்பு எதுவுமின்றி நான் அவர்கள் வீட்டிற்கு போன பொழுதுதான் அவர்களுடைய முறையற்ற உறவு பற்றி தெரிய நேரிட்டு அதிர்ச்சியடைந்தேன். அனால் அவர்கள் இருவருக்குமே இது தெரியாது. நான் இந்த கேவலத்தை வெளியே
சொல்ல இயலாமல் எனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கிறேன். எனது பெற்றோர் மனது உடைந்துவிடக் கூடாது என்பதால் நான் இதைப் பற்றி அவர்களிடம் கூறி எனது சோகத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
விவாகரத்து
வருடங்கள் இப்படியே ஓடின. என்னுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற வேதனையில் என் தாயும் இறந்து போனார். தன்னால் வாடகை கொடுக்க முடியவில்லை என்று கூறி, நான் வங்கியில் கடன் போட்டு வாங்கியிருந்த வீட்டில் ஈஸ்வரி குடியேறினாள். அனுவிற்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். என்றாவது மனம் மாறி குழந்தையுடன் வீட்டிற்கு வந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் நானும் என் தந்தையும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அனு இன்னும் மைனராக இருப்பதால் நான் விவாகரத்து பெறுவதை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார் ராமேஸ்வரன்.
தண்டனை கொடுக்க நினைக்கிறேன்
“நான் இப்பொழுது உங்களிடம் கேட்கப் போகும் உதவியை கேட்டு நீங்கள் என்னை ஒரு சுயநலவாதியாக நினைக்கலாம். நாம் இருவருமே விதி வசத்தால் நமது வாழ்க்கையை இழந்துள்ளளோம். நமது வாழ்வின் நிகழ்வுகளின் தாக்கத்தால் நமது பெற்றோரையும் இழந்துள்ளோம். நமது நிம்மதியை தொலைத்து விட்டு வலிகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இவை அனைத்திற்கும் காரணமானவர்களோ உங்களுடைய வீட்டிலேய உட்கார்ந்து கொண்டு நீங்கள் அனுப்பும் பணத்தில் சந்தோஷமாக வாழ்ந்து
கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் செய்த பாவங்களுக்கு தெய்வம் தண்டனை கொடுக்கலாம். ஆனால் நான் அவர்களுக்கு எப்படியாவது தண்டனை கொடுக்க நினைக்கிறேன். அந்த தண்டனை அவர்களுக்கு வலியை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். இவை அனைத்தையும் உங்கள் மூலமாக செய்ய
நினைக்கிறேன். இதற்க்கு நீங்களும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன்” – கீதா.
“ஒரு பூனை கூட, திரும்ப திரும்ப சீண்டப் பட்டால் தனது எதிரியை தனது கூரிய நகங்களால் திருப்பி தாக்கவே முயற்சி செய்யும். நாம் மனிதர்கள். ஏன் வேண்டுமென்றே நமக்கு இழைக்கப் படும் அநீதிகளுக்கு தலை வணங்கிப் போகவேண்டும்?” – கீதா.
அனுவை கூட்டி வரவேண்டியது முக்கியம்
சற்று நேரம் மவுனமாக இருந்தார் ராமேஸ்வரன். தன்னால் என்ன செய்ய முடியும்? வீட்டில் வயதான தந்தை, அலுவலக வேலை இவற்றுக்கு நடுவே கீதாவின் வேண்டுகோளை எப்படி நிறைவேற்றுவது? கொஞ்சம் குழம்பினார்.
அவர் குழம்புகிறார், தயங்குகிறார் என்பதை உணர்ந்த கீதா, மேலும், “சார், அனு இன்னும் பெரியவளாகவில்லை. அவள் நிலைமை என்னவாகும் என்பதை யோசியுங்கள். அவளும் பெண்தானே? அவளை முதலில் அவர்களிடமிருந்து பிரிக்க வேண்டும். நான் அவர்களை தண்டிக்க வேண்டும் என்று நினைப்பது கூட இரண்டாம் பட்சம்தான். ஆனால் அனுவை அங்கிருந்து எப்படியாவது கூட்டி
வரவேண்டியது மிகவும் முக்கியம்.”
அர்த்தமாக விளங்குவாள்
“அவளை நான் எப்படி தனியாக வளர்ப்பது? பெண் பிள்ளை ஆயிற்றே” என்றார் ராமேஸ்வரன். “அதற்கு ஏன் பயப்பட வேண்டும்? என்னை உங்கள் தங்கையாக நினைத்துக் கொள்ளுங்கள். அனுவை நான் பார்த்துக் கொள்கிறேன். அவளை படிக்க வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது வரை எல்லாவற்றிலுமே நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். நான் எப்படியாவது பாலனை வளர்ப்பது என்பதை எனது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருக்கிறேன். அத்துடன் அனுவையும் பார்த்துக்
கொள்வது எனக்கு நிச்சயமாக ஒரு மன நிறைவையும் உற்சாகத்தையும் அளிக்கும். எந்த சுவாரசியமும் இல்லாத எனது வாழ்க்கைக்கு அவள் ஒரு இனிமையான அர்த்தமாக விளங்குவாள்”. – கீதா.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அனுவும் கீதாவின் தாயாரும் அங்கு வந்தார்கள். “அப்பா, நான் இந்த பாட்டியோட ரெண்டு நாள் இருக்கேம்பா. நல்ல கதையெல்லாம் சொல்றாங்க. கீதா ஆன்டி வேற இருக்காங்க.” என்று ஆசையுடன் வினவினாள் அனு. ஆனால் ராமேஸ்வரனோ அனு அங்கு தங்குவது
கீதாவிற்கும் அவள் தாய்க்கும் தொந்தரவாக இருக்கலாம் என்று எண்ணி “இன்னும் சிறிது நேரம் இங்கேயே இருந்து விட்டு புறப்படலாம்” என்று சமாதானம் கூறினார். அனால் கீதாவோ, “பரவாயில்லை. எங்களுக்கு
ஒரு தொந்தரவும் இல்லை. அவள் இரண்டு நாள் என்ன லீவு முடியும் வரை இங்கேயே இருக்கட்டும்”
நான் சொன்னதை பற்றி சற்று யோசியுங்கள்
என்றாள். அதற்க்கு ராமேஸ்வரன் “அதற்கில்லை. அவள் தனது தாத்தாவுடன் சில நாட்கள் இருக்கட்டுமே என்றுதான் கூட்டி வந்தேன். வேண்டுமானால் இரண்டு நாள் இங்கே இருக்கட்டும். பின்னர் நானே வந்து அழைத்துப் போகிறேன்” என்று கூறினார். எல்லோரிடமும் விடை பெற்று புறப்படும் பொழுது, கீதா மீண்டும் ஒரு முறை, “நான் சொன்னதை பற்றி சற்று யோசியுங்கள். முடிந்தால் உங்கள் அப்பாவிடமும் யோசனை கேளுங்கள். மீண்டும் நீங்கள் அனுவை கூட்டிச் செல்ல வரும் பொழுது இதைப் பற்றி பேசுவோம்” என்றாள்.
ஒரு புது மாமி வரப் போவதாக
அனு அங்கு தங்கியிருந்ததால் இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை கீதாவுக்கு. ஆனால் இதனிடையே, ஒரு அதிர்ச்சியான தகவலை கொடுத்தாள் அனு. அவளுடைய மாமன் பாஸ்கருக்கு மீண்டும் ஒரு புது மாமி வரப் போவதாகவும் அவள் அழகாக இருக்கிறாள் என்றும் ஏதோ வங்கியில் வேலை
பார்ப்பதாகவும் கூறினாள். பேச்சினிடையே இந்த தகவலை அறிந்த கீதா, தான் நினைத்திருப்பதை எப்படியாவது ராமேஸ்வரனின் உதவியுடன் செய்து முடித்து விட வேண்டும் என்று தீர்மானித்தாள். இந்த மாதிரி மனிதர்களுக்கு எங்கிருந்துதான் மீண்டும் மீண்டும் பெண்கள் கிடைக்கிறார்களோ என்று கீதாவுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் கூடவே வெறித்தனமான ஒரு கோபமும் வந்தது. ராமேஸ்வரனின் வருகைக்காக அவள் காத்திருந்தாள்.
இரண்டு நாள் கழித்து ராமேஸ்வரன் தன் தந்தையுடன் வந்தார். அனைவரும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி, ராமேஸ்வரன் தன மனைவி ஈஸ்வரியிடமிருந்து விவாகரத்து கோர வேண்டும். அனுவை அவளது தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அதில் ஒரு முக்கிய
நிபந்தனையாக இருக்க வேண்டும். அவளுடைய ஜீவனாம்சமாக ஒரு தொகையை நிர்ணயிக்க வேண்டும்.
ஜீவனாம்சம்
இதற்கு சம்மதமென்றால் சுமுகமான முறையில் பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து சண்டையிட்டு விவாகரத்து பெற வேண்டும். ஆனால் அதில் ஈஸ்வரியின் ஈனமான வாழ்க்கை முறை உலகத்திற்கு வெட்ட
வெளிச்சமாக்கப்படும். அது மட்டுமல்லாமல் அதையே காரணமாக காட்டி, அவளுக்கு எந்தவிதமான ஜீவனாம்சம் கொடுக்காமலும் இருக்க முடியும். இவை அனைத்தும் முடிந்தவுடன், ஈஸ்வரியும், பாஸ்கரனும் ராமேஸ்வரனின் வீட்டை காலி செய்து விடவேண்டும். அதற்க்கு அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால்,
போலீசின் உதவியுடன் அவர்களை அந்த வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர்.
அவர்கள் போட்ட திட்டத்தை ஒவ்வொன்றாக செயல் படுத்த தொடங்கினார் ராமேஸ்வரன்.
நினைத்ததை நடத்தினாள்
கீதா கொடுத்த தன்னம்பிக்கையும் தனது தந்தை கொடுத்த தைரியத்துடனும் ராமேஸ்வரன் வெற்றிகரமாக ஈஸ்வரியிடமிருந்து விவாகரத்து பெற்றார். அனுவை அவர்களிடமிருந்து பிரித்து கொண்டு வந்து கீதாவிடம்
அவர் ஒப்படைத்தார். தனது வீட்டையும் திரும்ப பெற்று, அதை வாடகைக்கு விட்டார். அந்த பணத்தை அப்படியே அனுவின் செலவுகளுக்காக உபயோகப் படுத்தினார். பாஸ்கரன் திட்டமிருந்தபடி அவனது மூன்றாவது திருமணம் நடக்காமல் தடுத்து நிறுத்தினார்.
சுகமான சுமையாகி
கீதா, அனுவை தனது வாழ்வின் நிறைவை தரும் ஒரு இன்பச்சுமையாக எண்ணி மகிழ்வுடன் அவளை ஏற்றுக் கொண்டாள். அவளது வாழ்க்கையில் ஒரு புது உற்சாகம் உண்டானது – sumai thaangi tamil story 3.
அனு அவளது வாழ்க்கையில் சுகமான ஒரு சுமையாகி சுவையான ஒரு புது அத்தியாயத்தை துவக்கி வைத்தாள்.
– அனுமாலா சென்னை
கதாபாத்திரங்களுடன் ஒன்றிப் போக வைத்து விட்டார் கதாசிரியர் அனுமாலா அவர்கள். பாராட்டுக்கள்!!
கதை மிகவும் பாவமாக இருக்கிறது
கதையின் போக்கும், முடிவும் அருமை.பாஸ்கர் போன்றோரை தண்டிக்கால் விட்டால் இன்னும் பல பெண்கள் வாழ்வு கெடும்..வாழ்த்துகள் சகோதரி அனுமாலா
கதை மிகவும் அருமையாக உள்ளது,💐💐💐தவறு செய்வார்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்.