கவிதைகள் தொகுப்பு – 22

நீரோடையின் கவிஞர்களின் கவிதை சங்கமம், கவி தேவிகா அவர்களின் “கண்ட நாள் முதலாய்”, பொய்யாமொழி அவர்களின் “விட்டில் நினைவு”, நவீன் அவர்களின் தனியாக யாருமற்ற ஒரு அறையில்” மற்றும் உங்கள் நீரோடை மகேஷின் வரிகளுடன் – tamil kavithai thoguppu.

tamil kavithai thoguppu

கண்ட நாள் முதலாய்…

உந்தன் வதனமே
விழிகள் முழுதும்
ஆட்சி செய்கின்றது

நிழலிலும் நிதர்சனத்திலும்…
இருளிலும் ஒளியிலும்….
தொலைவிலும் அருகிலும்…..
அகத்திலும் அனைத்திலும்
உடனடி மாற்றமாக
உலகமாக மாறிவிட்டான்…
உன்னதமாக மாற்றிவிட்டான்..

– கவி தேவிகா, தென்காசி


விட்டில் நினைவு

நிகழ்வான
வில்லிரண்டு குடியேறி..
எழில் வண்ண
கடலாடும் கயலிரண்டு…
முகில் முட்டும்
ஏகாந்த மலைமேடு..
நான் விரும்பும்
நிறத்தோடு இதழிரண்டு…
தெளிந்தாடும்
அலைகொண்ட நீரோடையாய்
புரியாத புனலாக
பொழிகின்றதே..
நெஞ்சில் பொழிகின்றதே..
அழகோ பொன்னோவியமோ
யாரோ அவள் யாரோ – முடிவில்
கருமேகம் சூழ்ந்த நினைவானதே
என்றும் நினைவானதே..

– பொய்யாமொழி.பொ, தருமபுரி


இயற்கை அன்னையின் இதயம் நீ

ஓரறிவு ஓவியம் நீ,
இயற்கையின் இரு விழிகள் நீ,
பெரு மழைக்கு அடைக்கலமாக,
தவறவிட்ட மழைச் சாரலுக்காக ஏங்கும்
மனதை கிளையசைவில் நனைத்து
கீர்த்தி தருபவள் நீ.

மழைச் சாரலில்,
மலைச் (மண்) சரிவில், காக்கும்
காவல்தெய்வம் நீ!!!

இடம் பெயர்ந்திடவியலா இன்னுயிர் நீ!!
எதையும் எவரிடத்தும் எதிரபாரா
ஆழமான அன்பைக் கொடுப்பதில்
வள்ளல் நீ!!!

காற்றிசைக்கும் நற்பண்ணுக்கு
கிளைகரங்களால் அபிநயமிட்டு
பரதமாடும் பாவை நீ!!!!

உலகை உய்வித்து
உயர்ந்தோங்கி
புவி ஆளும்
பூலோக தரு நீ!!!

– நீரோடை மகேஷ்


தனியாக யாருமற்ற ஒரு அறையில்

தனியாக யாருமற்ற ஒரு அறையில்
அல்லது
இருந்தும் இல்லாமல் உபயோகமற்ற
மனிதர்களின் மத்தியில்
சில வேண்டா நிகழ்வுகளை சுமந்தப்படி
ஏதோ ஒரு வெறுமை ஆட்கொண்டப்படி
சில ரணங்களை நெஞ்சில் ஏந்தியபடி
எவருக்கும் கேட்காமல்
கண்களில் நீர் கோர்த்து
மல்லாந்து படுத்தப்படி

தன் கையை நெத்தி மீது கொடுத்து
கண்ணிலிருந்து வழியும் கண்ணீர்
நேராக வழியாமல் இரு பக்கமும்
பக்கவாட்டில் வழிந்தோடி
எச்சிலை விழுங்கி
தொண்டை கனத்து
கீழ் உதட்டை மேற் பற்களால் கடித்து கஷ்டப்பட்டு
அந்த அழுகையை அடக்கி
இதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்று
முணு முணுத்தப்படி
விட்டத்தையே வெறித்துப் பார்த்தபடி
தூங்கிய புலப்படாத இரவுகள்

என்னப்பா நல்லாயிருக்கியா னு
சுற்றி இருப்பவர்கள் நலம் விசாரிக்கும்போது
தான் நன்றாக இல்லையென்று கண்கள்
காட்டிவிடுமோ என்ற அச்சத்தில்
பீறிட்டு வரும் கண்ணீர் அமிலங்களை
கேட்பவருக்கு தெரியாமல் மறைத்து
விடுவிடுவென்று அந்த இடத்தை காலிசெய்து
மறைவிடத்தில் வந்து குலுங்கி குலுங்கி
வெடித்து அழுது தன்னை தானே – tamil kavithai thoguppu
சமாதானம் பண்ணி கொண்ட நாட்களும்

பொது இடத்திலோ திருமண இடத்திலோ
கோவிலோ பேருந்திலோ எதுவாயினும்
யாருமற்ற தனிமையில் சென்று வரும்போது
சில தேவையற்ற கேள்விகளை சுற்றத்தார்
வேண்டுமென்றே கேட்டு மனதை காயபடுத்தினாலும்
கண்ணீர்‌தான் வரப்போகிறது என்று அவர்களின் பிம்பத்தை
உடைத்து புன்னகையை கொடுத்து
எல்லாவற்றையும் மனதிலே புதைத்து
இனி நடப்பதற்கு எதுவுமில்லை என்று வைராக்கியத்தோடு
அவர்களின் முகத்தில் கரி பூசியது போல
திமிராக நடந்து வரும் அழகு இருக்கிறதே !

– ஈரோடு, நவீன்

You may also like...

4 Responses

  1. ப்ரியா பிரபு says:

    கவிதைகள் நன்று 👌👌

  2. தி.வள்ளி says:

    கவிகளின் சங்கமம் அருமை ..நீரோடையாய் மனதை வருடும் கவிதைகள் ..வாழ்த்துக்கள் கவிஞர்களே.

  3. பொய்யாமொழி says:

    நன்றி வாசித்தோருக்கும் வாசிக்க வழி செய்தோருக்கும்.

  4. Kavi devika says:

    வாழ்த்துகள் அனைத்து கவிஞர்களுக்கும்