திருநங்கை கவிதைகள் தொகுப்பு (பதிவு – 2)
திருநங்கைகளுக்காக நமது நீரோடையில் பல கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. இந்த கவிதை தொகுப்பு வாயிலாக ஏதிலி, ஜாகிர்உசேன் (கோவை), வேகவதி மதுரை மற்றும் தீனாநாச்சியார் – தஞ்சை ஆகியோரை நீரோடைக்கு அறிமுகப்படுத்துகிறோம். மேலும் இளம் கவிஞர் மணிகண்டன், கவி தேவிகா மற்றும் நீரோடை மகேஷ் ஆகியோரின் கவிதைகளும், சகோதரிகளுக்கு (திருநங்கை) சமர்ப்பணம் – thirunangai kavithai 2
வன்மையும் மென்மையும்
ஒருசேர கொண்டு
மனவலி யாவையும்
மென்முறுவலில் மறைத்து
கைதட்டி காணிக்கை பெற்று
மனம் போல் வாழ வாழ்த்தி
பிறர் முகவாட்டம் கண்டு
பரிவாய் பேசி
வேண்டிய உதவியை
பலன் பாராது செய்து
தந்தையும் தாயுமாய்
ஒருசேர கலந்து
ஒற்றை தெய்வமாய்
விளங்கிடும் உனை
மூன்றாம் பாலினம்
என்று மனம் ஏற்பதில்லை
கண்முன் தோன்றிய
இறைவியாய் உனை
நான் பார்க்கையிலே…
எட்டு அம்சங்களின்
அதி தேவதைகளை விட
ஒரு படி மேலாய்
ஒன்பது அம்சங்கள்
கொண்ட நங்கைகள்
வரலாற்றின்
அர்த்தநாரிகளாகவும்
அந்தப்புர வாயில்
காவலராகவும் ஓங்கி நின்ற
காலம் போய்
வாழ்வின்
அர்த்தங்களை தொலைத்து
வஞ்சிக்கப்பட்டு
இயல்பு வாழ்வியலை நீங்கி
கேளிப் பொருளாகி
கேட்பாரற்று நகரும்
வாழ்க்கை கடிகாரத்தினை
சற்று நிறுத்தி தன்னிலை மறந்து
பிறர் போல் வாழ்ந்திடயெண்ணி
பலதுறைகளில் பாதம் பதிக்கின்றனர் – தீனாநாச்சியார், தஞ்சாவூர்
மூன்றாம் பாலினம்
அவனா?
அவளா?
அதுவா?
எதுவாகிலும்
உணர்வா? உடலா?
எல்லாவற்றையும் மனிதமே நீ
உணராது ஒதுக்குவது சரியா?!
புரிந்துக்கொள்!
கனவோ நிஜமோ
தெளிவாய் தெரிவதெல்லாம்
பொய்யும் இல்லை
தெரிந்தே மறைப்பது எல்லாம்
உண்மையுமில்லை!
வாழ்வின் அர்த்தங்களின்
வரையறைகளை அர்த்தநாரியிடமே
காண்கிறேன்!! – வேகவதி, மதுரை
அவளுக்கென்ன அழகிய “அவள்” அவள்
பார்வைகள் மாறுகின்றன, பாவப்பட்டு
அல்ல படுக்கைக்காக..
பல கண்கள் தேடுகின்றன, கவலைப்பட்டு
அல்ல கலவிக்காக..
சில உதடுகள் என் பெயரை உச்சரிக்கின்றன,
உரிமைக்காக
அல்ல உரித்தெடுப்பதற்க்காக..
இந்த பாவப்பட்ட பிரபஞ்சத்தில்
நானும் ஓர் படைப்பு தான்..
வெந்து சோகப்பட்ட நெஞ்சத்தில்
வேண்டாம் தள்ளிவைப்பு தான்..
ஏதோ ஓர் எதிர்பாலின ஈர்ப்பால்
மாற்றிக்கொண்டேன்
ஏற்றுக்கொள்ளாவிடினும் பரவாயில்லை..
ஆனால்
ஏளனத்திற்க்கு மட்டும் ஏனோ பஞ்சமேயில்லை..
நகைக்கப்பட்டேன் நண்பர்களிடம்..
துரத்தப்பட்டேன் உறவினர்களிடம்..
ஒதுக்கப்பட்டேன் குடும்பத்தினரிடம்..
வாழ்வின் தொடக்கத்திலோ அல்லது தொடர் பாதியிலோ..
பலருக்கு தான் மங்கையாகவே பாவித்தது மனம்..
சிலருக்கு தான் நம்பியாகவே நினைத்தது குணம்..
இங்கு யாரும் எங்களை “திருவாகவோ/திருமதியாகவோ”
பார்க்க தயாராக இல்லை..
அது சரி மங்கைகளையே மதிக்காத மனிதம்..
திருநங்கைகளையா மதிக்கப்போகிறது..! – மணிகண்டன் சுப்பிரமணியம்
மூன்றாம் மனிதர்கள்
வயிற்றுப் பிழைப்புக்காக
கைதட்டி காசு கேட்கும்
வளர்ந்த குழந்தைகள் அவர்கள்….
அவமானங்களே அவர்களுக்கு
ஏனையோரின் வெகுமானம்…
அவமதிப்பை அப்புறப்படுத்தி
அடுத்த வேளை சோற்றுக்கு
சிரித்துப் பேசி சில்லறை கேட்பார்….
வெளியுலகப் போராட்டத்தை
வெகுளித்தனமாய் ரசித்திடுவார்
மனதில் நடக்கும் போராட்டத்தில்
மரணம் வரை தொடர்ந்திடுவார்…
உருவம் ஒன்று உள்ளம் ஒன்று
இரண்டுக்கும் மத்தியில்
இருள்களிலே துவண்டு விடுவார்
இருந்தாலும் வாழ்ந்திடுவார்….
குறியொன்றை குறைத்திட வேண்டி
குற்றுயிராய்க் கிடந்தாலும்
உற்றுப்பார்க்க நாதியில்லை
ஒரு ஆறுதல் சொல்லும் இல்லை…
பெற்றோர் மறுத்திடுவார்
மற்றோர் துரத்தி விடுவார்
இரக்கமற்று நடத்தப்படுவார்
இருந்தாலும் வாழ்ந்திடுவார்
காமக் கொடூரத்தின் வடிகாலாய்
காலம் இவர்களுக்கு வாக்களித்ததோ.?
உழைத்துப் பிழைத்திட
ஓருவாய்ப்பும் இங்கு இல்லை
தீமை இழைத்துப் பிழைத்திட
இவர்களுக்கு மனமில்லை…
கள்ளமில்லாத இவர்களின் வாழ்வில்
கழுமரத் தண்டனைக்கு குறைவில்லை…
ஒருவரையும் பொல்லாங்கு சொல்வதில்லை
உழைக்காமல் ஒரு நாளும் உண்பதில்லை
வடிகாலெனும் வாழ்க்கை மாறவில்லை
வாழ்வெங்கும் துன்பமின்றி இன்பமில்லை…! – ஜாகிர்உசேன், கோவை
திருநங்கை அல்ல தெய்வ நங்கை
ஆணையும் பெண்ணையும்
படைத்த பிரம்மனே
அவர்களையும் படைத்தான் …
உன்னிலும் என்னிலும்
சரிபாதியாக கொண்ட
இறைவனை வணங்கும்
இருக்கைகள் அவர்களைமட்டும்
அலட்சியப்படுத்துவது ஏனோ ????
மனமாற்றம் கொள்ள
மாற்றம் தவிர
மார்க்கமும் உளதோ ????
வேற்றுமை பார்க்க
வேற்றுகிரகவாசியல்ல…
அதிசயித்து பார்க்க
அருங்காட்சியகமுமல்ல….
எள்ளி நகையாடி
எக்காளம் செய்ய
எண்ஜான் உடல் மட்டுமல்ல …
எண்ணற்ற கனவுகள்
ஆசைகள் கொண்ட
அழகுசூழ்மலர்கள் தான்….
ஆம் அவர்கள்
திருநங்கைகள் அல்ல நாம்
கொண்டாட வேண்டிய
தெய்வ நங்கைகள் – கவி தேவிகா, தென்காசி
இருபால் சேர்ந்த ஒருவரி கவிதை
அவனுக்கு பிழையாக நின்றாள்,
அவளுக்கு இணையாக நின்றான்,
சிவன் பாதி சக்தி பாதி என்ற பெருமை,
வாழ்வியலுக்கு மட்டும் குறை என்பது மடமை..
எனது பார்வையில்
இருபால் சேர்ந்த
ஒருவரி கவிதை …
திருநங்கை…. – எதிலி
அர்த்தநாரிகள்
ஆணென்றும் பெண்ணென்றும்
பேதமில்லை ஒருவரிடத்தும்…
ஆணுக்குள் பெண்மையுண்டு….
பெண்ணுக்குள்ளும் ஆண்மையுண்டு…
மனிதத்திலும் மிருகமுண்டு
மிருகத்திலும் மனிதமுண்டு
அன்பிலும் வேசமுண்டு
வேசத்திலும் அன்புண்டு..
கருணையிலும் சுயநலமுண்டு…
சுய நலத்திலும் கருணையுண்டு…
சோகத்திலும் மகிழ்ச்சியுண்டு…
மகிழ்ச்சியிலும் சோகமுண்டு
இல்லை என மறுப்போருமுண்டு
உண்டென உரைப் பதுவுமுண்டு….
பொய்யிலும் வாய்மையுண்டு..
சில வாய்மையிலும் பொய்யுண்டு …
இம்மையிலும் மறுமையுண்டு
மறுமையிலும் இம்மையுண்டு
பிரித்தறிய முடியா வண்ணங்கள்
வாழ்வில் ஏராளம்
ஒன்றோடொன்று கலந்திருப்பதால்
இன்பம் என்றுமுண்டு…
இறையின் படைப்பில்
இரண்டற இணைந்திருக்கும்
யாவும் அர்த்தநாரிகள் தான் …. – நீரோடை மகேஷ்
கவிதை மொழி பேசிய அனைத்து கவிஞர் வரிகளும் அருமை. வாழ்த்துகள் கவிஞர்களே.
நெஞ்சை நெகிழ வைக்கும் கவிதை வரிகள். மாறுமா நமது சமுதாயம்?
மாற வேண்டும்.
காத்திருப்போம் நம்பிக்கையோடு.
அனைத்து கவிதைகளும் வலிகளை உணர்த்துகின்றன..
அனைவருக்கும் வாழ்த்துகள் 🎊
நீரோடைக்கு வரும் அனைத்து கவிகளுக்கும் அன்பு வணக்கம் கலந்த வாழ்த்துகள் 🎊
புதிய கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
அனைத்து கவிதைகளும் அருமை. மானுடம் போற்ற வேண்டிய தெய்வ நங்கைகளை பற்றிய அனைத்து கவிதைகளும் அருமை..
அனைத்து கவிதைகளும் அருமை.. ..வலி உணர்த்தும் வரிகள்… நிதர்சனமான உண்மை…திருநங்கைகளைப் பற்றிய சமுதாயக் கண்ணோட்டம் மாற வேண்டும் …வாழ்த்துக்கள் கவிஞர்களே.. புதுக் கவிகளுக்கு நீரோடையின் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் …
அறிமுக கவிஞர்களுக்கு பாராட்டுகள்…அனைத்து கவிகளும் அருமை. வாழ்த்துகள் … தொடர்ந்து தன்னிகரில்லா தடம் பதிக்கட்டும் நீரோடை…
அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள் . வாழ்க வளமுடன்
சிறப்பான கருத்துகளை
சிந்திக்கும் வகையில்
கவிதை படைத்திருக்கும்
கவிஞர்களுக்கு வாழ்த்துகள்
நீரோடை வலைத்தளத்தின்
இந்தச் சிறப்பான பணிகளில் கலந்து கொண்டு தாங்களும் சிறந்திட
புதிய கவிஞர்கள் விழையவேண்டும்
புதியவர்களுக்கான வாய்ப்புகளையும் விளைவிக்க வேண்டும்.
அனைவருக்கும் நன்றிகள்
சிறப்பான கருத்துகளை
சிந்திக்கும் வகையில்
கவிதை படைத்திருக்கும்
கவிஞர்களுக்கு வாழ்த்துகள்
நீரோடை வலைத்தளத்தின்
இந்தச் சிறப்பான பணிகளில் கலந்து கொண்டு தாங்களும் சிறந்திட
புதிய கவிஞர்கள் விழையவேண்டும்
புதியவர்களுக்கான வாய்ப்புகளையும் விளைவிக்க வேண்டும்.
அனைவருக்கும் நன்றிகள்
எல்லோர் கவிதைகளும் நன்றாக இருக்கிறது