தூங்கா விழிகள் – கவிதை நூல் ஒரு பார்வை

கவிஞர். பாப்பாக்குடி இரா. செல்வமணி அவர்கள் எழுதிய கவிதை நூலுக்கு ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் – thoonga vizhigal nool oru paarvai

thoongaa vizhigal puthaga vimarsanam

உலகில் எண்ணற்ற மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் மிகவும் உன்னதமான மொழி.. விழிகளின் மொழியே..
ஒற்றை பார்வையில் அன்பை., பரிவை., கோபத்தை., வெறுப்பை., கருணையை., காதலை.. தெரிவிக்க விழிகளால் முடியும். இதயங்களை இடம் மாற்றும் வல்லமையும் இதற்குண்டு.. விழியின் வழியே விதி மாறிப்போனவர்களும் உண்டு..

கவிஞர். பாப்பாக்குடி இரா. செல்வமணி அவர்களின் இந்த தூங்கா விழிகளில்.. அழகின் நிறை, அன்பின் பிறை, காதலின் சிறை, வாழ்வியலின் மறை (வேதம்) என நிறைந்திருக்கிறது – thoonga vizhigal nool oru paarvai.

தமிழ் என்றாலே அழகுதான்.. இதில் கவிஞர் பயன்படுத்தியிருக்கிற வார்த்தைகள் யாவும் அழகுத் தோரணங்கள்.. அவைகள் பொழியும் மழைநீரைப்போல் தூய்மையானதாய்.. கவிதைகளை மேலும் கவிதை செய்கின்றன.. திருக்குறளின் மறைபொருளாய் கவிப்பூக்கள் புத்தகம் முழுதும் மலர்ந்திருக்கின்றன. அட்டைப்பட ஓவியங்கள் மிகவும் வசீகரமாய்.. வாசிக்கத் தூண்டும் ஆவலைத் தருகின்றன..

விண்ணையும்.. மண்ணையும்..

அந்தகார வான்வெளியில்
ஓர் அழகுச்சோலை !
இலைகளற்ற கிளைகளில்
மலர்கள் !
பார்த்திடாத வண்ணங்கள் !
அருகில்
நெஞ்சம் நிறைந்த
வஞ்சிக்கொடி..
……….
……..
இக்கனவின்
கணங்களுக்காகவேனும்
கண்டிப்பாய் உயிர்வாழ்வேன்
இவ்வுலகில் இனிதாய் நானும் !

அழகான கற்பனை.. விண்ணையும்.. மண்ணையும் மெல்லிய இழை கொண்டு இணைக்கும் வலிமை காதலுக்கு உண்டு என்பதை உணர்த்தும் வரிகள்.

உன் கண்கள் பார்த்து
கற்சிலையானேன்.. !
கற்சிலையானாலும்
கனன்று கொண்டிருந்தது இதயம்..
…….
…….
கண்கள் அகழுவதெப்போ?
காந்தம் விடுவிப்பதெப்போ?
கற்சிலை உயிர்ப் பெறுவதெப்போ?

காதலின் மாயவலையில் கட்டுண்ட பின்னே மீளும் வழியேது.. விடுபடவும் முடியாத.. விட்டுவிடவும் முடியாத மோனநிலையாய்…அருமையாக இருக்கிறது..

கவிதைப் பூக்கள்

ஆறென்றாள்
ஆறென்றால்.. ஆறும் ஏழுமோ?
கூறென்றான்
ஊறும் உன் நினைவுகளால்
அன்பின் ஆறிது
அதரம் மொழிந்தாள்
ஆறென்றால் போருண்டே?
வம்பிழுத்தான்
விடுங்கள்
உங்கள் பூமணத்தைக்
கட்டவந்த நாரென்றாள்
தொடுத்தான்
ஊர்மெச்சும் பேர்வாங்க
எனைத்தாங்க வந்த
வேரென்றான்..

அழகிய வார்த்தைச் சரங்கள்.. காதலின் மணம் கமழும் கவிதைப் பூக்கள்.. நிச்சயமாக நுகராமல் நகர முடியாது.. கவிஞர் மிகுந்த இரசனையுடன் எழுதியிருக்கிறார் – thoonga vizhigal nool oru paarvai.

கற்பவர் எல்லோரும்
கல்வியில் முதலிடம்
சாத்தியமில்லை..
கற்றிடும் வகுப்பறையில்
ஒன்று கூடுவோர்
ஒருவர் தப்பாது
ஒழுக்கத்தில் முதலிடம்
சாத்தியமே..
ஒழுக்கமே சிறப்பு
ஒழுக்கத்துடன் கல்வி
இன்னும் சிறப்பு… !

உயர்வான வாழ்வுக்கு தேவையான ஒழுக்கத்தைப் போற்றும் வரிகள்.. ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய பொன்னான வரிகள்…

பகவத்கீதையும்., பரிசுத்த வேதாகமும்., திருக்குரானும்

மரைக்காயரின்
மாடி வீட்டு அறையில்
மகாதேவ ஐயரின்
மனதிற்கு ஆறுதல்..
அங்காளம்மன்
ஆலயவழிபாட்டுக்குழு
அப்துல்காதரையும்
ஆதரித்து அன்போடு
அரவணைத்தது..
இயேசு திருச்சபை
இல்லாதோருக்கும்
இயலாதோருக்கும்
இயன்ற உதவி…
இன்னும்
இருப்போரும்
இருப்பதைக் கொடுப்போரும்
இன்றிந்த உலகினில்.. !

இன்றைய சமூகச் சூழலில் இருக்க வேண்டிய நிலை குறித்து விளக்குகிறது இந்தக் கவிதை.. பகவத்கீதையும்., பரிசுத்த வேதாகமும்., திருக்குரானும் வலியுறுத்தும் கருத்துக்களை எளிமையாகவும் அழகாகவும் வார்த்தைகள் எனும் உளிகள் கொண்டு கவிதைச் சிற்பங்களாய்ச் செதுக்கியிருக்கிறார் கவிஞர்.

மேலும் இவர் கவிதைகளில் உயர் வாழ்வுக்குத் தேவையான கருத்துக்கள் நிறைந்திருக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய அருமையான கவிதைத் தொகுப்பு.. நல்லதொரு படைப்பு.. இவரின் இனிய தமிழில் இன்னும் பல கவிதை நூல்கள் வெளிவர வேண்டும்..
வாழ்த்துகள் மற்றும் வணக்கங்களுடன்.

– ப்ரியா பிரபு, நெல்லை

You may also like...

8 Responses

 1. S. V. Rangarajan says:

  ஆஹா அருமை அருமை.அருமையான விமர்சனம்.விமர்சனம் படிக்கும் போதே புத்தகம் வாங்கி படிக்க தோன்றுகின்றது

 2. R. Srinivasan says:

  தொகுப்பைப் படிக்கத் தூண்டும் அழகிய விமர்சனம். எடுத்துக் காட்டிய கவிதைகள் சிறப்பாய் இருந்தன. வாழ்த்துகள்

 3. தி.வள்ளி says:

  புத்தகத்தை போலவே அட்டைப்படமும் , நூல் தலைப்பு மிகவும் அழகு ..சிறப்பான ..விமர்சனத்தை தந்திருக்கிறார் சகோதரி பிரியா பிரபு அவர்கள். அவர் அள்ளித் தெளித்த தூரல்களே சாரல்களாய் நம் மீது விழுகிறது. நூல் படிக்கும் ஆவலைத் தருகிறது. பாராட்டுகள் சகோதரி …

 4. Kartheeswari says:

  Tamil endrale alagu. Athilum kavithai endral athu malalai alagu

 5. surendran sambandam says:

  நன்றாக இருக்கிறது தூங்கா விழிகள்

 6. ராதிகா says:

  விமர்சனத்தையும் கவினுற தந்திருக்கிறார்.
  கவிதைகளை மேலும் கவிதை செய்கின்றன–வார்த்தைகளில் வர்ணஜாலம் ”
  அழகின் நிறை, அன்பின் பிறை, காதலின் சிறை, வாழ்வியலின் மறை”என்னே சந்தம்!

 7. Priyaprabhu says:

  வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்..🙏🙏

 8. N.sana says:

  Kavithai anaithum arumai