47 நாட்கள்…. சிவசங்கரி – நூல் அறிமுகம்

சிவசங்கரி அவர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தத் தேவையில்லை. எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் . ஏற்கனவே படித்திருந்தாலும் முதல் தடவை படிப்பது போல ஒரு உணர்வு .முடிவு தெரிந்திருந்தும் ஒரு பரபரப்பு. இக்கதையை முதல்தடவை படிப்போர் கண்டிப்பாக அதிலிருந்து மீள ஓரிரு நாட்கள் ஆகும் – 47 natkal puthaga vimarsanam .

70-80..காலகட்டத்தில் உறவுகள் வெளிநாட்டில்.. அதுவும் அமெரிக்காவில் இருப்பது மிகப் பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது..ஆனால் 1978 இல் இப்புத்தகம் வெளிவந்த பிறகு அந்த நிலை தலைகீழாக மாறிப்போனது. தங்கள் பெண்களுக்கு அமெரிக்க மாப்பிள்ளை வேண்டாம் என்று அனேக பெண்ணைப் பெற்றவர்கள் மறுத்தனர். அந்த அளவுக்கு இப்புத்தகம் ஒரு தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தியது.

இனி கதைக்குள் போவோம்…

விசாலின் திருமணத்தோடு கதை ஆரம்பிக்கிறது ..பட்டம் மாவின் கடைசி மகள் விசாலி.. மூத்தவள்ஞானம்..அடுத்தவன் சந்துரு .கடைக்குட்டி விசாலி. 17 வயதே ஆன விசாலிக்கு..அமெரிக்க மாப்பிள்ளை குமார் வரனாக வர திருமணம் நிச்சயமாகிறது.நல்ல இடம் அமெரிக்க மாப்பிள்ளை…

தன் பேச்சால்…நடவடிக்கையால்… எல்லோர் மனதிலும் பெரும் மதிப்பை பெறுகிறான் குமார். விசாலியை அவன் உள்ளங்கையில் வைத்து தாங்குவதைப் பார்த்து குடும்பமே மகிழ்ச்சியடைகிறது.. .

அடுத்து வந்த நாட்களில் இருவரும் அமெரிக்கா கிளம்புகின்றனர் .நகரத்து நாகரீகம் முற்றிலும் அந்த கிராமத்துப் பெண்ணுக்கு புதிதாயிருக்க, இருப்பினும் கணவன் அன்பால் நெகிழ்கிறாள்.

அமெரிக்காவை அடைந்து அவர்கள் வசிக்கும் ஊரான ஷிகாகோ செல்கிறார்கள். மிகப் பெரிய மாளிகை போன்ற வீட்டைப் பார்த்து பிரமிக்கிறாள். . குமார் மனதுக்குள் சிரித்துக் கொள்கிறான். தன்னுடைய திட்டம் இதுவரை சரிவர எந்த இடத்திலும் பிசகாமல் நடந்ததற்காக.

சில வருடங்களுக்கு முன் ..அவன் அமெரிக்கா வந்த புதிதில் அவன் சந்திக்கும் டாக்டர் வில்லியம்ஸ் மிகப்பெரிய பணக்காரி.. அவள் தகப்பனார் சொத்துக்கு ஒரே வாரிசு… திட்டமிட்டு அவளுடன் நெருங்கி பழகி அவளை ஈர்த்து திருமணமும் செய்து கொள்கிறான். ஆனால் லூஸிஅவனிடம் உண்மையான பாசம் வைத்திருக்கிறாள். ஒரு வருடத்திலேயே லூஸியுடனான உறவு அலுப்பைத் தர, பல பெண்களுடன் பகல் வேளையில் அவள் மருத்துவமனைக்கு செல்லும் நேரத்தில் உறவு கொள்கிறான் – 47 natkal puthaga vimarsanam.

பின் தாய் ,தந்தையர் வற்புறுத்த இந்தியா வந்து கிராமத்துப் பெண்ணான விசாலியை மணக்கிறான்..கிராமத்து பெண் என்பதால் தன்னை கேள்வி கேட்க மாட்டாள் தனக்கு பணிந்து போய் விடுவாள் என்ற நினைக்கிறான்.

முதல் சில நாட்கள் லூசி இல்லாததால் விசாலியுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறான். லூஸியை வீட்டு சொந்தகார பெண்மணி என்று சொல்லிவிடுகிறான். விரைவில் லூஸியுடன் அவன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்து அதிர்கிறாள். கணவனிடம் அதுபற்றி கேட்க.. அவன் “அவள் என் மனைவி! அவளை அனுசரித்தால் தான் இந்த சொகுசான வாழ்க்கை கிடைக்கும்” என்கிறான்.

மனம் திடுக்கிட்ட விசாலி, ஊருக்கு தன்னை அனுப்பச் சொல்லி கத்துகிகிறாள். அவன் இந்த எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. லூஸியும் வந்துவிட… விசாலியை தன் தங்கை என்று அறிமுகப்படுத்துகிறான். இரக்க குணம் உள்ள லூஸி, விஷாலியை மிகவும் அன்பாக கவனித்துக் கொள்கிறாள். விசாலி எதிர்ப்பை காட்ட முற்படும் போதெல்லாம் சித்திரவதைக்கு ஆளாகிறாள் . தப்பிக்க முயற்சிக்கிறாள் .வழிதெரியாமல் பனியில் மாட்டிக்கொண்டு வீடு திரும்புகிறாள்.

9 மாத கர்ப்பிணியான லூஸி தன் குழந்தைக்காக சில சாமான்கள் வாங்க ஷாப்பிங் சென்டர் போகிறாள். விசாலியை தன்னுடன் அழைத்துச் செல்கிறாள். அப்போது மார்க்கெட்டில் அவள் சந்திக்கும் ஒரு வட இந்திய பெண்ணிடம் லூஸிக்குத் தெரியாமல் உதவி கேட்கிறாள்.

இதற்கிடையே விசாலி தான் கர்ப்பமாக உள்ளதையறிந்து மனம் பதறுகிறாள். அவள் கர்ப்பத்தை குமார் அறிந்து கொண்டதும் எடுக்கும் கொடூர முடிவு .. அப்புறம் அவளுக்கு நேர்ந்ததென்ன.அடுத்து வரும் சம்பவங்கள் பரபரப்பின் உச்சம் . தலைப்பின் படி அவள் திருமணமான நாற்பத்து ஏழாவது நாளில் கதை முடிகிறது. என்ன ஆகிறது…விசாலி காப்பாற்றப்படுகிறாளா..அவளைக் காப்பாற்றுவது யார். .லூசி என்ன ஆகிறாள்… குமார் நிலை என்னவாகிறது ..பதைபதைக்க வைக்கும் கடைசி பக்கங்கள்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிவசங்கரி மிகவும் அழகாக செதுக்கியிருக்கிறார் . குமாரின் நிமிடத்துக்கு நிமிடம் மாறும் கொடூரமான மனம் பதைக்க வைக்கிறது . அதேபோல விஷாலி…கிராமத்துப் பெண்ணின் வெகுளித்தனம் .கணவனை நேசிக்கும் பாங்கு ..அதே கணவனின் மறுபக்கம் தெரிந்ததும் அடங்க மறுத்து எதிர்ப்பது …அனைத்தும் அருமை. லூஸி..விசாலியைப் போலவே இவளும் ஒரு பரிதாபத்துக்குரியவள். உண்மையான அன்பை குமாரிடம் செலுத்துகிறாள். விசாலியை அவன் தங்கை என்று நினைத்து அவளிடம் அன்பு பாராட்டுகிறாள் ..

ஒரு கயவனால் இரு பெண்களின் நிலையும்.. வாழ்க்கையும்.. எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதே இக்கதை படித்தவளாகட்டும், கிராமத்து பெண்ணாகட்டும் கணவனை நேசிப்பதில், நம்புவதில், ஒரே நிலைப்பாடு. அதேநேரம் அவன் தங்களை ஏமாற்றியதை அறியும் போது ஒரே கொதிப்பு இருவரிடமும். பல நுணுக்கமான உணர்வுகளை எதார்த்தமாக அழகாக கையாண்டிருக்கிறார் ஆசிரியர்.அதுவே இக்கதை மாபெரும் வெற்றி பெற்றதற்கு அடிநாதமாக கருதுகிறேன். நேரம் கிடைக்கும் போது படித்து மகிழுங்கள்

தி.வள்ளி , திருநெல்வேலி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *