வணக்கம் வள்ளுவ! கவிதைத் தொகுப்பு ஒரு பார்வை

ஈரோடு தமிழன்பன் அவர்களின் வணக்கம் வள்ளுவ! கவிதைத் தொகுப்பு. 2004ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல், பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட நூல் 190 பக்கங்கள் கொண்டது – vanakkam valluva nool vimarsanam

vanakkam valluva nool vimarsanam

உலகப்பொதுமுறை திருக்குறளின் மையக் கருத்துக்களை உள்வாங்கி அவற்றைச்சாறெடுத்து இனிய பழரசமாக நமக்கு புதுக்கவிதை வடிவில் கொடுத்து மகிழ்கிறார் கவிஞர்.ஈரோடு தமிழன்பன் அவர்கள்.


நீரோடை மகேசின் நீரோடை பெண் கவிதை நூல் ஒரு பார்வை – மேலே சொடுக்கவும்


நவீன யுத்திகள், எளிதான வார்த்தைகள், உணர்ச்சிப் பெருக்குகள், இந்த வணக்கம் வள்ளுவ நூலின் சிறப்பம்சம்.

சிவத்தம்பி அவர்களின் முன்னுரையான வாழ்த்துதுரையும், ஆங்கிலப் பேராசிரியர் சங்கரநாராயணன் அவர்களின் வாழ்த்துரையும் சிறப்பாக அமைந்துள்ளது.

ஸ்யாம் அவர்களின்முகப்பு ஓவியமாக வள்ளுவர் அமர்ந்திருப்பதும், உள்ளே உள்ள மருது அவர்களின் கோட்டோவியங்கள் இப்புத்தகத்தின் அணிகலன்கள்.

மொத்தம் 22 கவிதைகள். அத்தனையும் நீள்கவிதைகள். வணக்கம் வள்ளுவ என்ற கவிதை முதல் கவிதையாகவும் உலக மனிதனை உருக்கி வார்க்க என்ற கவிதை நிறைவு கவிதையாகவும் அமைந்துள்ளது – vanakkam valluva nool vimarsanam.

கவிதைகள் அனைத்தும் தலைப்போடு ஒரு கோட்டோவியம், அடுத்து நீள்கவிதையின் சாராம்சம் தரும் ஒரு குறுங்கவிதை, அதன் பின்னே நீள்கவிதை நம் கண் முன்னே வருவதாக நூல் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்த நூலில் நான் ரசித்த ருசித்த இனிய பழச்சாறு கவிதைகளை இங்கே பகிர்ந்து மகிழ்கிறேன்.

வணக்கம் வள்ளுவ

வணக்கம் வள்ளுவ இந்த தலைப்பில் அவர் எழுதிய கவிதையில் நான் ரசித்த வரிகள் இதோ…

“காலம்
உன் கருத்துக்களின் சந்திப்பில்
தனது கோடுகளை
கரைத்து விட்டது”

“அரசர்களின் இதயங்களிலிருந்து
ஆணையிட்டுக் கொண்டிருந்த அதிகாரங்களை
அப்புறப்படுத்தி விட்டு
மக்களை அங்கு நீ அமர வைத்தாய்”

“மக்கள் தலைக்கு மேல்
உன் குறட்பா குடை பிடித்தது
மன்னர்கள் நினைவுக்குள் பெருகியது…
நிழல் வெள்ளம்”

ஆம் வள்ளுவத்தின் சிறப்பை வாழ்த்தி எழுதிய உன்னதமான வரிகள் மேற்கண்டவை.

எட்டாவது சீர்

எட்டாவது சீர் என்ற கவிதை மிக அழகான ரசிக்கத்தக்க கவிதை.

“ஏழாவது சுரம்
கதவை இழுத்து மூடியதால்
எட்டாவது சுரம்
ஏமாந்து திரும்பி இருக்கலாம்”

என்று தொடங்கும் கவிதை
வானவில்லின் ஏழு நிறங்களையும்,
வாரத்தின் ஏழு கிழமைகளையும் சொல்லுவதோடு மட்டுமின்றி உலகத்தின் நடப்புகளில் ஏழை பட்டியலிடுகிறார் கவிஞர்.

“எட்டாவது சீர்கள் எல்லாம்
இப்போது உன் சிலை முன்
உண்ணாவிரதம் இருக்கின்றன
என்ன கோரிக்கை தெரியுமா?

திரும்பவும்
நீ வந்து இன்னொரு திருக்குறள் எழுதும்போது
ஏழு சீடர்களுக்கும் வேண்டுமாம்”

என்று கவிதையை நிறைவு செய்கிறார். ஆம் வள்ளுவரே இது அவர் ஆசை மட்டுமல்ல எங்கள் ஆசையும் கூடவே!

வள்ளுவரின் கனவாக என்ற தலைப்பில் அவர் எழுதிய உன்னத வரிகள் நமது கனவிலும் நடந்து அது நம் வாழ்வெனும் நினைவில் நடத்தல் வேண்டும்.

“வள்ளுவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்…
பனை ஓலையும் எழுத்தாணியும் விழித்திருக்க”

என்றவாறு தொடங்கும் கவிதையில் கவிஞரின் கனவு யாதெனில்

“நானும் உறங்க வேண்டும் வள்ளுவர் போல்.‌.
வள்ளுவர் தூக்கத்திற்குள்
ஒரு கனவாக நுழைந்து விட
நான் உறங்க வேண்டும்”

என்பதாக சொல்லியுள்ளது அருமை.


உலக மனிதனை உருக்கி வார்க்க வள்ளுவரோடும், பூங்குன்றரோடும்
இந்தக் கவிதையின் மூலம்
அவர் முயன்றுள்ளது அற்புதம்.

“சூரியனையும் பூமியையும்
தொட்டுக் கொண்டு பேசினான்
கணியன் பூங்குன்றன்..
தமிழ் அவன் சொற்களுக்குள் புகுந்து
திசைகளை விரிவுபடுத்தியது”

என்றவாறு தொடங்குகிறது இந்தக்கவிதை. பூங்குன்றனாரின் எண்ணங்களை தன் வரிகளில் பூத்துக்குலுங்கும்படி செய்திருக்கிறார் கவிஞர்.

மேலும் இக்கவிதையில் அவர் சொன்ன மற்றொரு வரிகள் இதயத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இதோ அவ்வரிகள்…

“அர்த்தங்களை மாற்றிவைத்து
வார்த்தையை வாழ்க்கையை
அழுக்காக்கி விடுகிறான் மனிதன்
திசை மாற்றி வைப்பானோ மனிதன் என்று
தினம் தினம் விடியல் கூட தடுமாறி விடுகிறது”

என்ற அச்ச வார்த்தைகளும்
நம் நெஞ்சில் உச்சம் தொட்டது.
ஆம் அதற்காகவே உலக மனிதனை உருக்கி வார்க்க வேண்டும்.. வள்ளுவம் தழுவும் வடிவத்திலும்… பூங்குன்றனாரின் பொதுச்சிந்தனையின் புன்னகையிலும்…

இந்தக் கவிதையை அவர் நிறைவு செய்யும் போது

“இங்கும் உலக மனிதனை உருக்கி வார்க்கக்
கொல்லுப்பட்டறை திறந்தனர்..
பூங்குன்றன் பேரர்கள்..
இதோ சத்தியச் சுத்தியல்
சம்மட்டி ஓசை
யாதும் ஊரே யாவரும் கேளீர்”

என்று நம் மனதில் நிலைக்கிறது தமிழன்பன் அவர்களின் ஒவ்வொரு வரிகளும்…

இத்தொகுப்பு முழுவதும் நிரம்பி வழியும் வள்ளுவத்தை நம் மனதில் ஏற்றினாலே போதும்…
உலகமும் நம் வாழ்வும் வசப்படும்.

கோவை ஞானி அவர்கள் தமிழன்பனின் படைப்பும் பார்வையும் நூலில் ஒரு இடத்தில் சொல்லியிருப்பார்.

“தமிழன்பனின் கவிதைகளில், அதீத அழுத்தத்தோடு இன்று வரலாற்று வளர்ச்சிக்கு தேவைப்படுகின்ற பொது புதிய மனிதன் பற்றிய படிமம் தான் எடுப்பாக தெரிகிறது”

ஆம் உண்மைதான்… வணக்கம் வள்ளுவத்திலும் அதுவே மிளிர்கிறது.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் நம் கண்முன்னே கொண்டு வந்த வள்ளுவத்தை போற்றிப் புகழ்வதோடு நின்று கொள்ளாமல் நாளும் வாசிப்போம். இன்புறுவோம்! நூல் தேவைக்கு பூம்புகார் பதிப்பகம் 044 25267543.

– ம.சக்திவேலாயுதம்

You may also like...

2 Responses

  1. தி.வள்ளி says:

    கவிஞர் அவர்களின் நூல் அறிமுகம் மிகவும் அருமை…வள்ளுவனையும்,வள்ளுவத்தையும்ஒரளவு அறிந்திருந்தாலும் , இதுபோன்ற நூல்கள் மேலும் நாம் அறியாததை எடுத்துரைக்கும் பொக்கிஷம் …சத்திய சுத்தியல் சம்மட்டி ஓசை அருமை ..

  2. ஹேமலதா says:

    வணக்கம் வள்ளுவ பாடலின் விளக்கம் அனைத்தும் வேண்டும் தயவு கூர்ந்து உதவுங்கள் நன்றி