புரட்டாசி மாத மின்னிதழ் (Sep-Oct-2020)
இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மற்றும் ஆவணி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – purattasi matha ithal.
நீரோடைக்கு புதிய கவிஞர் கோபால் அவர்களை அறிமுகம் செய்கிறோம்,
எனக்கென ஒரு பயணம்
கண்ணில் ஒரு வலி என்றால்
கலங்கி நிற்பது விழிப்பாவைகளே!
தேடலின் சொந்தம் உன் உள்ளம்தான்
எனக்கு கிடைத்த பொக்கிஷம் !
தவற விட மாட்டேன் என் மூச்சு
இம்மண்ணை விட்டுப் பிரியும் வரை..
இன்னொரு பிறவியில் வாழ்ந்திட
விருப்பங்கள் என்னில் இல்லை,
இப்பிறவியில் கிடைத்த வாழ்க்கையில்
மகிழ்வாய் வாழ்ந்திட தெரியவில்லை !.
சிரிப்பில் வேசங்கள் போடலாம் ஆனால்
அதுவே நிரந்தரம் ஆகிவிடுமா?!
நாம் பயணிக்கும் பாதைகள் எல்லாம்
ஏதோ ஓர் அனுபவங்கள் கற்றுத்தரும்
வாழ்க்கை பாடம் ஆகும்.
மற்றவரின் பாதையில் சென்றிட
வழி தேடவில்லை
என் பாதையில்
எனக்கென்று ஒரு பயணம்
சரித்திரத்திற்கு அல்ல
வாழ்ந்து முடிக்க... – கோபால்
சிவப்பு மட்டை அவல் எலுமிச்சை சாதம்
தேவையான பொருட்கள்
சிவப்பு மட்டை அவல் – ½ கிலோ.
எலுமிச்சை – 1
சின்ன வெங்காயம – 10
கடலை பருப்பு – 2 சிட்டிகை
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய் வற்றல் – 3
உ்ப்பு – தேவையா அளவு
நல்லெண்ணெய் – 1 குழிக்கரண்டி
செய்முறை
முதலில் அவலை பத்து நிமிடம் ஊறவைக்கவும். பிறகு இட்லி தட்டில் வைத்து ஆவியில் பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி, கடுகு கடலைப் பருப்பு , நறுக்கிய இஞ்சி , மிளகாய் வற்றல் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் அவலை சேர்த்து வதக்கவும்.எலுமிச்சையைப் பிழிந்து உப்பு சேர்த்து அவலுடன் கலக்கவும்.தேவைப்பட்டால் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
சுவையான சிவப்பு மட்டை அவல் சாதம் தயார்.
நன்மைகள்
- உடல் எடையைக் குறைக்க உதவும்
- உடல் சூட்டைக் குறைத்து புத்துணர்ச்சியைத் தரும்.
- நார்ச் சத்து்ம் வைட்டமின் சத்தும் நிறைந்தது.
– ஏஞ்சலின் கமலா, தமிழ் ஆசிரியை, மதுரை.
கோவிட் 70
கோவிட் 19 – ஐம்பது ஆண்டுகள் கழித்து கோவிட் 70, கதையின் தலைப்பு.
மேலோகத்தில், பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் அமர்ந்திருக்கிறார்கள். ஒன்றா, இரண்டா ஐம்பது வருடங்கள் நம் பணியை நிறுத்தி…. வாழ்க்கையே போரடிக்கிறது. கொரோனாவால் இறந்தவர்கள் இங்கு வந்தால் தேவர்களுக்கு, தொற்றி நம்மையும் பிடித்துக் கொள்ளுமோ என நான் பூலோக வாசிகளை அழிக்கவில்லை.. உலகம் சம நிலையில் இருப்பதால் பிரம்மாவும் படைக்கும் தொழிலை நிறுத்தி விட்டு, சரஸ்வதியுடன் தாயம் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
கொரோனா மக்களிடம் இரண்டற கலந்து விட்டதால், விஷ்ணுவும், பாற்கடலில் உறக்கம்.. உறக்கம் தான்… மூன்று வேளையும் திருமகள் தான் எழுப்பி அமுது ஊட்டுகிறாள்… என்ன செய்ய… இப்படியே இருந்தால் சுணக்கம் வந்து விடுமே… ” சிவன் புலம்ப, நாராயணா … நாராயணா… மும்மூர்த்திகளும் ஒன்றாகக் காணும் பாக்கியம் எனக்கு.. “நாரதர் மெர்சலாக, ” அதெல்லாம் இருக்கட்டும்.. ஐம்பது வருஷமாச்சு. பூலோகத்தில் கொரோனாவின் ஆட்சி தான் விஷ்ணு வருத்தப்பட, பக பக வென சிரித்த நாரதர், அதற்குரிய தீர்வோடு தான் வந்திருக்கேன்.
மருத்துவக்கடவுள் தன்வந்தரியை மறந்து விட்டீர்கள். அவரிடம் சென்றால் நோய்த் தொற்றை நீக்கும் வழி சொல்வார்.. கூற, உடனே தன் வந்திரியை அழைத்தனர். அவர் விஷயத்தை சிம்பிளாக முடித்து விட்டார் – purattasi matha ithal.
பூலோக வாசிகள், இயற்கை உரங்களில் விளைவித்த உணவுகளை உண்டாலே, எதிர்ப்பு சக்தி கூடி கொரோனா துண்டைக் காணோம்.. துணியைக் காணோம் என ஓடி விடும் என்றார். அருமையான யோசனை மும்மூர்த்திகள் கைதட்ட, நாரதர் மீடியாகாரர்களுக்கு உடன் மெசேஜ் அனுப்ப, 2071ல் லாக்டவுன் இல்லா உலகமானது பூலோகம். (இதுவும் கற்பனை தான்.)
– என். கோமதி, நெல்லை
வாழ்க்கை ஒரு கணக்கு
பொறப்பில் இருந்து ஆரம்பிக்குது
பெருங்கணக்கு..
முத்துப்பல்லு சிரிப்பிலிருந்து
முதல் கணக்கு..
தத்தித்தாவி நடக்கும் போது
நடை கணக்கு..
காதை தொட்டு சேரும் போது
பள்ளிக் கணக்கு..
திருவிழாவில் கொடுக்க வேனும்
கூட்டு கணக்கு..
தேவதைகள் பாவடை தாவணியில் வலம் வரும் போது
பருவ கணக்கு..
முளைத்த மீசையை முறுக்க நினைப்பது வளரும்
மைனர்களின் கணக்கு..
கடுகு டப்பாவில் கையை வைத்தால் அது
அம்மா கணக்கு..
கால்சட்டை பையில் கையை வைத்தால் அது
அப்பா கணக்கு..
கட்டி வைத்த துணை என்பவர்
ஓர் காலக்கணக்கு..
அவர்கள் கடைசிவரை கைகோர்க்க வேண்டுமென நினைப்பது
கடவுள் கணக்கு..
நமக்கு ஒன்றென்று ஆகும் போது அது
வாரிசு கணக்கு..
அதை கரைசேர்க்க போராடுவது என்பது
கடைமையின் கணக்கு..
எல்லாம் முடிந்து களைப்பாற நினைத்தால் அது
வயதின் கணக்கு..
நெத்தியில ஒட்டி வைக்க கூட வேண்டுவது
ஒரு ரூபாய் கணக்கு..
இறுதியாக நாலு பேர் நம்மை சுமப்பது கூட
ஒரு எண்ணிக்கையின் கணக்கு..!
அட வாழ்க்கையே ஒரு கணக்குதானுங்க…!
இன்னும் நிறைய கணக்குகளோடு
– மணிகண்டன் சுப்பிரமணியம்
சிவபெருமானை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அறிய 50 விடயங்கள்
1. சிவசின்னங்களாக போற்றப்படுபவை – திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்
2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம் – ஐப்பசி பவுர்ணமி
3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் – தட்சிணாமூர்த்தி
4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? – திருப்பெருந்துறை
5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் – திருக்கடையூர்
6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் – பட்டீஸ்வரம்
7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர் – திருமூலர்
8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் – திருவெண்காடு
9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது – துலாஸ்நானம்
10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது – கடைமுகஸ்நானம்
11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன் – கோச்செங்கட்சோழன்
12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன் – நடராஜர்
13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம் – சிதம்பரம்
14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம் – காசி
15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம் – திருவண்ணாமலை
16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம் – மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம் – மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)
18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர் – சின்முத்திரை
19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர் – சுந்தரர்
20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம் – ஸ்ரீசைலம்(ஆந்திரா)
21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம் – ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்
22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம் – திருவண்ணாமலை
23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார் – திருமங்கையாழ்வார்
24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம் – பரணிதீபம் (அணையா தீபம்)
25. அருணாசலம் என்பதன் பொருள் – அருணம்+ அசலம் – சிவந்த மலை
26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை – ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்
27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர் – பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்
28. “”கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு – 1997, டிசம்பர் 12
29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம் – திருவண்ணாமலை (கிளி கோபுரம்)
30.. கார்த்திகை நட்சத்திரம் – தெய்வங்களுக்கு உரியது (சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்)
purattasi matha ithal
31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம் – 24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)
32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர் – அனுமன்
33.நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? – திருவாசகம்
34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்? – அறவிடை (அறம் – தர்மம், விடை – காளை வாகனம்)
35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள் – அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)
36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? – 108
37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர் – காரைக்காலம்மையார்
38.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர் – அப்பர் (திருநாவுக்கரசர்)
39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம் – ஆணவம் (ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்) முயலகன்
40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் – குற்றாலம்
41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம் – சங்கார தாண்டவம்
42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்? – வெள்ளியம்பலம்(மதுரை)
43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம் – பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
44. நடராஜருக்குரிய விரத நாட்கள் – திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம் – களி
46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன் – தாயுமானசுவாமி
47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம் – காளஹஸ்தி
48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர் – பிருங்கி
49. திருமூலர் எழுதிய திருமந்திரம் – திருமுறையாகும் (பத்தாம் திருமுறை)
50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம் – திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது. – நீரோடை
முக்கிய விரத தினங்கள் அமாவாசை - புரட்டாசி 30 (16-10-2020) பௌர்ணமி - புரட்டாசி 15 (01-10-2020) பிரதோஷம் - புரட்டாசி 13 (29-09-2020) மற்றும் புரட்டாசி 28 (24-10-2020)
மணிகண்டன்,கோபால் அவர்கள் கவிதை அருமை…கோமதி அவர்கள் கதை அற்புதம்.. நல்ல கற்பனை..உண்மையிலேயே தன்வந்தரியை மறந்துவிட்டோம்….அவல் சாதம் அருமை..சிவச் செய்திகள் திகட்டாத தெள்ளமுது…மொத்ததில் பல்சுவை விருந்து..
எல்லாமே செம தூள் சிவபெருமான் விஷயங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
கோபால் அவர்களுக்கு வாழ்த்துக்கள், இரு கவிஞர்களின் கவிதைகளும் அருமை.
அனைவரும் யோசித்து மாற வேண்டிய கதையை தந்த கோமதி அவர்களுக்கு நன்றி..
சமையல் குறிப்பு அற்புதம்..
ஒவ்வொரு பகுதியும் மிக அருமையாக இருக்கிறது.
அனைத்தும் அழகு இதுவே நீரோடையின் தனிசிறப்பு… வாழ்த்துகள்
பாராட்டிய உள்ளங்களுக்கு நன்றி.