தமிழாற்றுப்படை – புத்தக விமர்சனம்

கவிஞர் வைரமுத்து அவர்களின் “தமிழாற்றுப்படை” நூல் பற்றி கவிஞர் (நெருப்பு விழிகள்) ம.சக்திவேலாயுதம் எழுதிய நூல் விமர்சனம் – tamil atruppadai book review

tamil atruppadai book review

சூர்யா லிட்ரச்சர் பி லிட் வெளியீடுபக்கங்கள் 360, விலை 500/-

ஆதி உண்டு அந்தம் இல்லை எனத் தொடங்குகிறது வைரமுத்து அவர்களின் என்னுரை.. அந்த என்னுரை முடிக்கும்போது அவர் சொல்லியுள்ளது… “பிள்ளைகளுக்கு தமிழ் ஊட்டி வளர்க்கும் தமிழர்களின் தொடர் பரம்பரைக்குக் காணிக்கைகிறது “தமிழாற்றுப்படை” என்று சொல்லியிருப்பது சிறப்பு.

24 மாமனிதர்களை பற்றி

24 கட்டுரைகள் அமைந்துள்ள அற்புதமான கட்டுரைத் தொகுப்பு..
தொல்காப்பியர், கபிலர், அவ்வையார், திருவள்ளுவர், இளங்கோவடிகள், அப்பர், ஆண்டாள், செயங்கொண்டார், கம்பர், திருமூலர், கால்டுவெல், வள்ளலார், உ வே சாமிநாதையர், மறைமலையடிகள், பாரதியார், பெரியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், அண்ணா, கலைஞர், கண்ணதாசன், பட்டுக்கோட்டை, கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன், அப்துல் ரகுமான் என்றவாறு 24 மாமனிதர்களை பற்றிய அற்புதமான கட்டுரைத்தொகுப்பு – tamil atruppadai book review.

ஒவ்வொருவரையும் பற்றிய சிறந்த செய்திகள், தகவல்கள், அவர்களின் படைப்புகள், அவர்களின் வாழ்க்கை முறைகள், அவர்களின் மொழியாற்றல், அவர்களின் சிறப்புகள் எனக்கட்டுரை முழுவதும் வைரமுத்து அவர்களின் எழுத்துக்களால் மிளிர்வதோடு மட்டுமல்லாமல் நம்மைக் கவர்ந்திழுப்பதும் உண்மை.

தொல்காப்பியத்தின் சிறப்பு

தொல்காப்பியர் மொழி ஒரு உயிரி எனத் தொடங்கும் இக்கட்டுரை முழுவதும் உயிர்ப்பான சிந்தனைகள் நிரம்பி வழிகின்றன. மொழியின் சிறப்புகளும், மொழியின் இலக்கண வரையறைகளும் தொல்காப்பியத்தின் சிறப்புகளும் இக்கட்டுரையில் எடுத்தியம்பப்படுவது நமக்கு மிக பயன் உள்ளதாக உள்ளது.

இந்தக் கட்டுரையின் வைரமுத்து அவர்கள் ஓரிடத்தில் மிக அழகாய் சொல்கிறார். “இந்தக் கட்டுரை எழுதப்படும் 2018ல் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு 68 அகவை ஆகிறது. இந்த 68 ஆண்டுகளில் இந்திய அரசமைப்புச் சட்டம் 101 முறை திருத்தப்பட்டுள்ளது.

ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியரின் தமிழ் மொழிச் சட்டம் இன்று வரை ஒரு திருத்தத்திற்கு ஆளாகாமல் உயிர்ப்போடு இயங்கி வருகிறது. சட்டம் வகுத்த தொல்காப்பியர் இருக்கும் அது பெருமை கட்டிக்காத்த தமிழர்களுக்கும் பெருமை” – tamil atruppadai book review

கபிலர் பற்றி

இத்தனை சிறப்பு மிக்க வரிகள்.இது இக்கட்டுரையில் நான் மிகவும் ரசித்த வரிகள் என்று சொல்ல முடியும். அடுத்து கபிலர் பற்றிய கட்டுரை…
“இயற்கையை இழுத்துவந்து வாழ்வோடு இணைத்த படைப்பாளர் பலர்.. ஆனால் வாழ்வென்ற அரும்பொருளை இயற்கை என்ற பெரும்பொருளோடு ஐக்கியப்படுத்திய அரும்பெருங்கவி என்றே குறிஞ்சிப்புலவர் கபிலர் கொண்டாடலாம்” இந்தப் பாராட்டு இக்கட்டுரையின் முதல் பக்கத்தில் வருகிறது.

மேலும் “மனிதராகிய உயர்திணை க்கும், மனிதர் அல்லாத அஃறிணைகளுக்கும், இயற்கை விட்டுக்கொடுத்த உயிர் ஒப்பந்தத்தின் மூலப்படியை முற்றிலும் உணர்ந்து கொண்ட முதற்றமிழ்க்கவி இவரே என்று முன்மொழிவதில் எனக்கு ஒரு தயக்கம் இல்லை”…

உள்ளபடியே இக்கட்டுரை முழுவதும் தமிழரை போற்றிப் புகழ்வதோடு மட்டுமல்லாமல்.. அவரது படைப்புகளையும் பெருமையாய் பேசியுள்ளார் வைரமுத்து அவர்கள்.

அவ்வையார் பற்றிய கட்டுரைசங்ககால அவ்வையை அழகாய் எடுத்துப் பேசுகிறது.. “அவ்வை என்பது ஒரு தமிழ் மூதாட்டியை மட்டும் சுட்டும் தனிச்சொல்லன்று.அறிவறத்திலும் துறவறத்திலும் முறைபோகிய ஒரு மூதாட்டிக்கு தமிழ்ச் சமூகம் வழங்கிய பட்டம் என்றே அது சுட்டப்பெற வேண்டும். அம்மை என்ற சொல்லே அவ்வை என்று தெரிவித்தது என்ற கருதுகோளும் உண்டு.”

என்று வைரமுத்து அவர்கள் சொல்லி உள்ளது கட்டுரைக்கான வளம் என்றே சொல்வேன். மேலும் இக் கட்டுரையில் இன்னொரு இடத்தில்….

அவ்வையை பெருமிதப் படுத்தியுள்ளார்

“ஆண்களுக்கான ஒழுக்க விதியை பெண்டிர்குலப்பெருமாட்டி ஒருத்தி வரையறுத்தார் என்பதே அவளது தூங்காமை கல்வி துணிவுடைமை அறிவின் பெருமை அறத்தின் வலிமை தொண்டின் வாய்மை தூய்மை அனைத்தையும் காட்டும் அடையாளங்களே” ஆகும் என்று அவ்வையை பெருமிதப் படுத்தியுள்ளார் கட்டுரையாளர்.

திருவள்ளுவர்

திருவள்ளுவர் பற்றிய கட்டுரை இன்னும் மிகச் சிறப்பு என்று சொல்ல முடியும். திருக்குறளின் சிறப்பை நாம் அறிந்திருந்தாலும்.. இக்கட்டுரையில் அறியப்படாத தகவல்கள் பல உள்ளன – tamil atruppadai book review.

அவர் இக்கட்டுரையில் திருக்குறளைப் பற்றி சொல்லும்போது ஒரு இடத்தில் மிக அழகாகச் சொல்கிறார். “தாய்ப்பால் நிறுத்தப்பட்ட வயதில் முப்பால் என்னும் தகப்பன் பால் குடித்து வளர்ந்தவர்கள் நாங்கள்”..

திருக்குறள்

“திருக்குறள் என் வாழ்வின் நிழலாகவே வந்து கொண்டிருக்கிறது”
மேலும் இந்தக் கட்டுரையை முடிக்கும் போது அவர் சொல்லியுள்ள செய்தி மிக ஆழமான அழுத்தமான செய்தி..

“எனக்கு ஒரு ஆசை சாவிலும் நான் திருக்குறளை சார்ந்திருக்க வேண்டும்..என் வாழ்வின் நிறைவிற்கு பிறகு என் தாய் மண்ணின் இரண்டாம் கருக்குழியில் நான் கிடத்தப்படும்போது என் நெஞ்சில் திருக்குறளை வைத்து என் இரு கைகளையும் அதை அணைத்துக் கொள்ளுமாறு இணைத்து விடுங்கள்..இது என்ன மூடநம்பிக்கை என்று சில வெல்லலாம் இது 63 வயதில் நான் எழுதிய உயில் என்று கொள்ளலாம்” என்ன ஒரு அற்புதமான எண்ணம்.

புதுமைப்பித்தன்

“மரணத்தின் காலடி ஓசை அண்மையில் கேட்கிறது என்பதை அறிந்தும் ஆனால் அது 13 நாட்கள் தூரத்தில்தான் நிலை கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் தமிழ்ச் சமூகத்திற்கு தன் கசப்பான ஆனால் கர்வமான விண்ணப்பத்தை முன்வைக்கிறார் புதுமைப்பித்தன்” என்ற வரிகளுடன் தொடங்கும் புதுமைப்பித்தன் கட்டுரை அவர் வாழ்ந்த சூழ்நிலையை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது மிகச் சிறப்பு.

மேலும் ஓரிடத்தில் வைரமுத்து அவர்கள் புதுமைப்பித்தனை பெருமிதப்படுத்தும் விதமாக சொல்லும் வரிகள் மிக அழகு.

“தமிழில் சிறுகதை என்ற முயற்சி பாரதியில் முளைத்து வ.வே.சு ஐயரில் வளர்ந்து மணிக்கொடியில் செழித்து பொதுவுடைமையில் பூத்து திராவிட இயக்கம் வரை காய்த்துக் குலுங்கினாலும் அதன் உருவம் பழுத்தது புதுமைப்பித்தனில்தான் என்று சொல்லத் தோன்றுகிறது”புதுமைப்பித்தனுக்கு அவர் செய்யும் சல்யூட் என்றே சொல்வேன்.

ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் அவர்கள் பற்றிய கட்டுரையில்..”புதுமைப்பித்தன் தன் எழுத்தையும் மூச்சை நிறுத்திக் கொண்ட அதே ஆண்டில் தன் முறையிலிருந்து பேனாவை உருவினார் ஜெயகாந்தன்” என்றவாறு கட்டுரை அமைந்துள்ளது.
இக்கட்டுரையில் வரும் கேள்வி பதிலாக அமைந்துள்ள அனைத்து செய்திகளும் மிக அருமை.

மேலும் “என்னை அவர்கள் கிறுக்கன் என்று நினைத்திருக்கலாம்.. சில வட்டாரங்களில்  என்னை அப்படித்தான் அழைத்தார்கள் என்று எனக்குத் தெரியும்.. நானும் அப்படித்தான் இருந்தேன்” அந்தக் கருத்து ஞானக்கிறுக்கு என்றோ அதில் கிறுக்கை கழித்து ஞானத்தை மட்டும் கலை செய்ய வேண்டுமென்றோ நிமிடத்தை பொன்னாக்கும் சினிமாவுக்கு நினைத்துப் பார்க்க நேரம் இருந்திருக்காது.

இப்படியாக ஜெயக்காந்தன் சினிமாவுக்குள் வந்து போன ஒரு வசீகரம் மற்றும் நீண்டு தேய்ந்த நிழல்‌.  இந்த செய்திகளை எல்லாம் இந்த கட்டுரையில் வைரமுத்து அவர்கள் சொல்லியுள்ளதும், ஜெயகாந்தன் அவர்களின் சினிமாப் பிரவேசத்தைநம்மால் உணர முடிகிறது.

இவ்வாறு இத்தொகுப்பில் உள்ள அனைத்து கட்டுரைகளும் ரசிக்கும்படியாகவும்,தகவல்களாகவும், செய்திகளாகவும்,  அறியப்படாத தகவல்கள் பல நிரம்பப் பெற்று உள்ளதால்தமிழாற்றுப்படை என் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது. உங்கள் மனதில் இடம்பெற வேண்டாமா..

நல்லதொரு தொகுப்பு.. வாங்கிப் படித்து மகிழ்ந்திருங்கள்.

– ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்

You may also like...

4 Responses

 1. Rajakumari says:

  நூல் விமர்சனம் மிகவும் அருமை

 2. Kavi devika says:

  அருமையான புத்தக விமர்சனம்… படிக்க தூண்டும் ஆவல்… கவிஞருக்கு வாழ்த்துகள்

 3. தி.வள்ளி says:

  சகோதரர் சக்தி வேலாயுதம் அவர்கள் விமர்சனம் தமிழாற்றுப்படை புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தை மிகவும் தூண்டியது. கட்டுரைகள் அனைத்தும் அற்புதமெ
  னில் அதை அவர் விவரித்த விதம் அதைவிட அற்புதம்.விமர்சனம் மிக அருமை வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

 4. ஹேமநாதன் says:

  புத்தக அறிமுகம் அருமையாக உள்ளது.எனது புத்தகம் வாங்கும் பட்டியலில் தமிழாற்றுப்படையையும் இணைத்துக்கொள்கிறேன்.
  நன்றி