காரணம் – சிறுகதை

வாசகராக, ஆசிரியராக தொடர்ந்து பயணிக்கும் ஆர். பிருந்தா இரமணி அவர்களின் சிறுகதை – kaaranam sirukathai.

kaaranam sirukathai

“ஸ்வாதி! பெரியவங்களுக்கு வணக்கம் சொல்லுமா!” என்று கற்பகம் தன் மகளைச் சொன்னாள்.

ஸ்வாதி பெண் பார்க்க வந்தவர்களை வணங்கி விட்டு உட்கார்ந்தாள்.
பையனின் அப்பா சொன்னார்: “பொண்ணு பார்க்கவே ரொம்ப அடக்கமா தெரியுது; எங்க குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இருப்பான்னு எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு!” “ரொம்ப சந்தோசம்!” என்று ஸ்வாதியின் அப்பா சொன்னார்.

பழக்க வழக்கம் சரியில்லை

பையனின் அப்பா தொடர்ந்தார்: “போன வாரம் தான் ஒரு பொண்ணைப் பார்த்துத் தட்டிப் போச்சு; அந்தப் பொண்ணே வேணாம்னு சொல்லிடுச்சு; விசாரிச்சதுல அந்தப் பொண்ணோட பழக்க வழக்கம் சரியில்லைன்னு தெரிஞ்சது; நானே வேற பையனோட பஸ் ஸ்டாண்டுல பார்த்தேன்; நல்ல வேளை, ஆண்டவனே எங்களைக் காப்பாத்தி, மகாலக்ஷ்மி மாதிரி இருக்கிற உங்க பொண்ணு கிட்டே சேர்த்திட்டான்!”

கல்யாணத்துல விருப்பம் இல்லை

பேச்சு தொடர்ந்து அடுத்த கட்டத்துக்குச் சென்றது. “எப்ப தாம்பூலம் மாத்திக்கலாம்?” என்று பையனின் அப்பா கேட்டார்.
ஸ்வாதி பேச்சை இடைமறித்து, “பெரியவங்க பேசும் போது இடையிலே பேசுறதுக்கு மன்னிக்கணும்; எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை!” என்று சொன்னாள் – kaaranam sirukathai.

“ஸ்வாதி என்ன இது?” என்று ஸ்வாதியின் அப்பா பதறிய போது கூட “அப்பா ப்ளீஸ்!” என்று சொல்லி விட்டாள்.

வந்தவர்கள் கிளம்பிச் சென்று விட்டார்கள். அவர்கள் சென்றவுடன் கோபத்துடன் ஸ்வாதியின் அம்மா கற்பகம், “என்ன காரியம் செஞ்சிருக்கே ஸ்வாதி?” என்று கத்தினாள்.

பேச்சில் இருந்த நியாயம்

ஸ்வாதியோ பொறுமையாக, “அம்மா! நான் சொல்றதக் கொஞ்சம் பொறுமையா, கோபப்படாம கேளுமா; அவங்க இதுக்கு முன்னாடி பார்த்த ஒரு பொண்ணைப் பத்திச் சொன்னாங்க இல்லையா? அது வேறு யாரும் இல்லைமா, என்னோட தோழி ஹரிணி தான்மா; அவ மேலே படிக்கணும்னு ஆசைப்பட்டா; இது தெரியாம அவங்க அப்பா-அம்மா மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வரச் சொல்லிட்டாங்க; இவ பொறுமையா தெளிவா அவங்க கிட்டே விளக்கி இருக்கா; ஆனா பாரும்மா, இவ காரக்டர் மேலேயே பழி போடறாங்க;

இவங்க பஸ் ஸ்டாண்டுல பார்த்தது அவளோட பெரியப்பா பையன் கூடத் தான். அப்படியே வேற பையனோட பார்த்தாக் கூட அது அவன் வகுப்புத் தோழனா இருக்கலாம்; இவங்களா எப்படி ஒரு தப்பான முடிவுக்கு வரலாம்? நமக்குப் பிடிக்கலேன்னா வீணா பழி போடக் கூடாதும்மா; இந்தக் குணம் வாழ்க்கைக்கு நல்லதில்லை!” என்று முடித்தாள்.

அவள் பேச்சில் இருந்த நியாயம் அவளுடைய அப்பா, அம்மாவை அமைதி காக்க வைத்தது.

– ஆர். பிருந்தா இரமணி, மதுரை

You may also like...

9 Responses

 1. உஷாமுத்துராமன் says:

  அருமையான சிறுகதை. பாராட்டுக்கள்

 2. என்.கோமதி says:

  சூப்பர் ஸ்வாதி…உன்னோட எண்ணங்களை மதித்த பெற்றோருக்கு சல்யூட்.

 3. N.கோமதி says:

  சூப்பர் ஸ்வாதி..மகளின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட பெற்றோருக்கு வாழ்த்துகக்கள்.

 4. தி.வள்ளி says:

  அருமை..எளிமையான கதையில் முக்கியமான ஒரு விஷயத்தை தெளிவுபட கூறியிருக்கிறார்…பெண் அமையவில்லையென்றால் அதற்காக அப்பெண்ணின் நடத்தையை குறை கூறுவது மிகப் பெரிய தவறு..அது அவள் எதிர்காலத்தை பாதிக்கும்…முக்கியமான விஷயம்.பாராட்டுகள்…ஆசிரியருக்கு

 5. Kavi devika says:

  காரணம் சிறுகதை, நற்சிந்தனை கதை. வாழ்த்துகள்.

 6. Rajakumari says:

  Super brinda mam

 7. R. Brinda says:

  விமர்சனம் எழுதிய அனைத்து தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!!

 8. நிர்மலா says:

  அருமையான கதை.பாராட்டுகள்.

 9. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

  கதை சிறிதே ஆனால் கருத்தோ பெரிது…! வாழ்த்துக்கள்..!