ஆசிரியர் தின கவிதைகள்

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதற்கு கைம்மாறு செய்ய முன்னணி கவிஞர்களுடன் இணைந்து ஆறுக்கும் (6+) மேற்பட்ட கவிஞர்கள் தங்களின் குருவுக்கு செய்யும் மரியாதையாக “ஆசிரியர் தினம் 2020” கொண்டாட எழுதிய கவிதைகளின் தொகுப்பை வெளியிடுகிறோம் – aasiriyar thinam kavithaigal.

ஆசானுக்கு மரியாதை செலுத்தும் இந்நாளில் கவிஞர் அன்புத்தமிழ் அவர்களை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்..

aasiriyar thinam kavithaigal

குரு வணக்கம்;
உளி கொண்டு செதுக்குவதால்,
வலிகள் என்னவோ சிற்பிக்குத்தான்…
உயிரில்லா கற்களுக்கல்ல…
அறிவெனும் ஞான உளிக்கொண்டு நம்மை சிற்பமாக்க
அதிக வலிகளை தாங்கிக் கொள்வது சிற்பியின் கரங்கள்தானே…..

காகிதங்களை கோர்த்து அடையாளம்
தரும் அட்டைப்படமாய்,
மண்புழுவை வளர்க்கும் உழவுத்தாயாய்,
புத்தகத்தின்  பக்கங்களை ஓரிரு முறை  வாசிக்கவே
சலித்துக்கொள்ளும் நமக்கு மத்தியில்
ஓராயிரம் முறை படித்து பயணித்து
கடைசிவரை ஏணியின் படிக்கட்டுகளாகவே
தியாகித்து நன்மை கிரகிக்கும் ஜீவன்
ஆசிரியர் மட்டுமே. – நீரோடை மகேஷ்


“ஆ”சிரியர்கள் (குற்றம் களைபவர்கள்)

“அ”கர வரிசையில்,
அன்பை அள்ளித் தருவதில் அன்னை ;
ஆவலோடு கற்றுக் கொடுப்பதில் ஆசான்;
இன்பத் தமிழ் இயம்புவதில் இலக்கணம்;
ஈந்து கொடுப்பதில் ஈசன்;
உண்மை உபதேசிப்பதில் உகந்தார்;
ஊக்கம் தருவதில் ஊக்கலர் ;
எண்ணம் சீரமைப்பதில் எண்குணார் ;
ஏற்றம் தருவதில் ஏணி ;
ஐயம் தெளிவுறுத்தும் ஐம்பொறி;
ஒற்றுமை பரைவதில் ஒன்றுநர்;
ஓய்வின்றி உழைப்பதில் ஓசன்;
ஔவிய மனநோய் அகற்றும் ஔடதம்;
நன்மாணவரால் வல்லரசாகும் நாடு;
அத்தகையோரை உருவாக்க அவர்படும்பாடு;
என்றபோதும் கடமையாற்றுவர் விருப்பத்தோடு…
மலர்ந்த புன்னகை முகத்தோடு…
என்றென்றும் ஆசிரியர் துதிபாடு…
மறவாத நன்றி உணர்வோடு….. கவி தேவிகா, தென்காசி.


எலிசபெத் டீச்சர்

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்
கசியும் உணர்வுகளுக்கு ஆறுதலாக

மொழியை தூவிய
எலிசபெத் டீச்சர் குரலில்
அந்த வார்த்தைகள்
அந்த நேரத்திற்கு அற்புதமாகிறது
எனில் – aasiriyar thinam kavithaigal

மந்திரமிக்க
அந்தக் கற்பனை ஏணியில்
இன்றும்
துணையின்றி ஏறுகிறேன்

என்னைப் போலவே
அப்பாவிற்கும் அம்மாவிற்கும்
எலிசபெத் டீச்சரே தான்
வகுப்பு ஆசிரியர்

ஆனால்
அவர்களுக்கு
ஏணிகள் இருந்தனவா தெரியவில்லை

எனது ஏணிகள் எனக்குள் மட்டுமே மறைந்திருக்க
அவ்வப்பொழுது ரகசியமாக
வானுக்கும் பூமிக்குமாக
போய் வந்துகொண்டிருக்கிறேன்

பயணங்கள் எனக்குள்
அவ்வளவு வசீகரமானது .. பொன் இளவேனில்


குயவனின் கை பட்டு பட்டு
களிமண்
மட்பாண்டமாகி
நிற்பதைப்போலவே…
சிற்பியின் உளி பட்டு பட்டு
கற்பாறைகள்
சிலையாகி நிற்பதைப்போலவே…
ஓவியரின் தூரிகைகள் பட்டு பட்டு
வரைபடங்கள்
வண்ண ஓவியமாகி
நிற்பதைபோலவே…
எம்மெழுத்துகள் கூட்டி கூட்டி
சொற்கள்
உங்களைக்கவர்ந்த கவிதைகளாய் நிற்பதைப்போலவே…
ஆசானே உம்மிடம் குட்டு பட்டு பட்டு
நிமிர்ந்த மரமாய்
நிழல் தரும் கிளைகளாய் நாங்கள்…
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
சொல்லித்தந்த இவ்வுலகத்தின்
உயிர்மெய்யெழுத்தே
“ஆசிரியர்கள்”ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்


சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

எம் தாய்த்தமிழ் மொழிக்கு வேனுமுங்க சிறப்பியலு,
அத தவறில்லாமல் என் நாவில் தவழவிட வந்ததிங்கு தமிழியலு..!
உலகமெல்லாம் சுற்றி வர உலகமொழி ஒன்னு சொல்லு,
அதை திணிக்காமல் இனிப்பாக்க கொண்டு வந்தது ஆங்கிலவியலு..!
காலத்துக்கும் கடக்க வேனும் காந்தி நோட்டு கணக்கியலு,
அத கைய விட்டு எண்ணிச் சொல்லி கொடுத்தென்னவோ எண்ணியலு..!
வானத்துல வளைந்திருக்கும் வண்ணமய வானவில்லு,
அதன் அடிப்படையை உணர்த்தியது அறிவிப்பூர்வ அறிவியலு..!
உன் வீட்டைத் தாண்டி ஓர் உறவுக் கூட்டமிருக்கு அதையை நீயும் அறிந்து கொள்ளு.. – aasiriyar thinam kavithaigal
அரசியல் பேசும் அதை அன்றாடம் பேசும் அது தான் இந்த சமூகவியலு..!
இன்று எண்ணிலடங்கா பாடமிருக்கு பல்துறையுமிருக்கு..
ஆனால் நாம் ஏட்டில் எழுதி ஆரம்பிக்கும் போது இந்த ஐந்து துறை தான் ஆணிவேர் நமக்கு..!
வாத்தியார் மீது வரம்புமீறிய வஞ்சனையும் கொண்டோம்..
கொஞ்சம் தாமதமாய்,
வஞ்சனை எல்லாம் நம் வளர்ச்சிகென்று புரிந்து நின்றோம்..!
அவர்களின் பிரம்புக்கு கூட சில சமயங்களில் சிக்கியதும் உண்டு..
ஆனால்
பல இடங்களில் பிரம்மன் ஞானம் கிடைத்ததே உண்மையில் ஒன்று..!
அன்றைய அரசமரத்தடியோ..
அல்லது இன்றைய ஆன்லைன் நெறிப்படியோ..
எப்போதும் ஆசிரியர் என்ற பெருங்களஞ்சியம் உண்டு..
அதை அச்சாரமாய் நீயும் எடுத்துக் கொண்டு..
உனக்கான பாதையை நோக்கி புறப்படு வீறு கொண்டு..!
என்றோ ஓர்நாள் ஆர்ப்பரிப்பாய், ஆசிரியர்களின் அறப்பணியை கண்டு..!
கலைக்க மனமில்லாத நினைவுகளை
நினைத்தபடியே மணிகண்டன் சுப்பிரமணியம்

apj abdul kalam

பிடிக்காத கணிதமும் பிடித்தே போனது…

எந்த ஒரு மனிதனின்
நல் எதிர்காலத்திற்காக
அதிகம் உழைக்கும்
ரத்த சம்பந்தம் இல்லாத
முதல் உறவு ஆசிரியர்!…

பிடிக்காத கணிதமும்
பிடித்தே போனது
பிடித்த ஆசிரியரால்!…

நீங்கள் ஏறி வந்த ஏணியை ஒருமுறை திரும்பிப் பாருங்கள்
ஒவ்வொரு ஏணிப்படியும்
ஆசிரியரின் பெயர்!…

இறைவனின் அருளால்
ஆசிரியர்களுக்கு மட்டும்
ஆயிரம் ஆயிரம் குழந்தைகள்!…

முறிந்த பிரம்புகள்
அறிந்திருக்கவில்லை தான் தழுவியது ஒரு எதிர்கால மருத்துவரை பொறியாளரை என்று அந்த ஆசிரியரை தவிர!..

20 வயதிற்குள் நாம் அதிக முறை
சென்ற கோவில் பள்ளி
தரிசித்த தெய்வம் ஆசிரியர்கள்!…

ஒரு நல்ல மாணவன்
பள்ளி மாற்றம் செய்யும்
வேளையில் வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து
வருந்தியது அந்த ஆசிரியரும் தான்!…

கருத்த வண்ணம்
பெருத்த உடல்
சோடாபுட்டி கண்ணாடி
சுருட்டை முடி
எல்லாவித உருவ அமைப்புகளையும் நாம் ஹீரோவாக பார்த்தது
பள்ளியில் தான்!.. – பிரவீன் அவிநாசி


அனைத்துமானவன்

கல்லாயிருந்தோம்
கலையாக்கினாய்

மண்ணாயிருந்தோம்
பொன்னாக்கினாய்

என்னையறியா என்னை பலர்
அறியச் செய்தாய்

எதுவுமே தெரியா
எனக்கு என்னையே
எனக்கு தெரிந்திட
செய்தாய்

பெற்றோரே என்னை
நம்பாத போது
எனை நம்பி எதையும் செய்தாய்

நானா நானா என
நான் தயங்கிய போதெல்லாம்
நீதான் என உரக்க
சொல்லி என்
மனதில் நம்பிக்கையை
விதைத்து சென்றாய்

இவனெல்லாம் என்று
கேளி செய்த குரலனைத்தும்
அவனா இவன் என
வாயடைத்து
போகச் செய்தாய்

உலகமே என்னை உயர்த்தி பிடித்தாலும்
அன்று நான்
உங்களின் கைவிரல்
பிடித்ததால் தான் இன்று நான்
உயர்ந்து நிற்கின்றேன்

நான் உலகறிய வேண்டுமென எந்த எதிர்பார்ப்புமின்றி
எனக்காக மனதார வேண்டிய
முதல் மனம்
எந்தன் ஆசிரியர்களின் மனம்

வாழ்த்த வயதில்லை
அனைவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.!!

– இரா. அன்புதமிழ்

You may also like...

8 Responses

 1. Kavi devika says:

  அருமை. அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்…

 2. Rajakumari says:

  அனைத்து கவிதை களும் அற்புதம்

 3. Sriram says:

  அனைத்து கவிதைகளும் பலர் உள்ள உணர்வை ஏதோ ஒரு இடத்தில் தொட்டுக்காட்டுவதாய் அமைந்தது சிறப்பு… வாழ்த்துகள்…

 4. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

  ஆசிரியர்களின் மேல் இருக்கும் மரியாதையை அன்பாய் வெளிபடுத்திய நீரோடை மகேஷ், கவி தேவிகா, பொன் இளவேனில், சக்தி வேலாயுதம், பிரவீன், இரா அன்புதமிழ் என அனைத்து கவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 🎊

 5. அன்பு says:

  அனைத்து கவிகளுமே ஆசான்களை உறவாக தாண்டி தன் உணர்வாக நினைத்ததன் வெளிபாடு.. அனைவருக்கும் வாழ்த்துகள்.. அதோடு இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளும்..

 6. தி.வள்ளி says:

  அனைத்து கவிகளின் ஆசிரியர் தின கவிதைகளும் மிகஅருமை..பல்வேறு விலைமதிப்பிலா மணிகள் கோர்க்கப்பட்ட மாலை.கவிகளுக்கும் வாழ்த்துகள்..

 7. பாரிஸா அன்சாரி says:

  அறவழியில் அகிலத்தில் நம்மை நடாத்திய,

  ஆசிரியப் பெருந்தகைகள்!

  இன்பக்கிறக்கத்தில், கல்வியறிவு,

  ஈந்துவந்து நம்மை வளர்த்த,

  உயர்ந்த உள்ளங்கள்பற்றி-மன,

  ஊறலிலிருந்து எடுத்து அசை போடும் நேரம்!

  என்ன இது சப்தம்?

  ஏனிந்த ஆரவாரம்?

  ஐயகோ!
  இன்ப நினைவோட்டம் தடை பட்டதே!!

  ஒருநொடி , வெளியே வந்து,

  ஒங்கிப்போட்ட சத்தத்தில்,

  ஔடதம் கண்ட நோய் போல், அனைத்தும் நின்றன.

  அதையடுத்து பார்த்த காட்சிகள் -அஃதொப்பதில்!

  ஆம்!
  என் தமிழ் உடன் பிறப்புக்கள்,

  கள்ளமின்றி,அவர்தம்,
  உள்ளக்கிடக்கையை,

  தெள்ளு தமிழில் அளித்து,
  அள்ளிச்சென்று விட்டார்,அனைவர் உள்ளங்களையும்!

  ஆசிரியருக்கு- அவர் தந்த உவமைகள்,
  மாசற்ற அறிவிற்கும், ஆசிரியர் மீது அவர் கொண்ட மதிப்பிற்கும் சான்று!

  அனைத்து கவிதைகளும்,அமிழ்தமே!
  எதைச் “சுவைப்பது”,
  எதை “வைப்பது”.

  மல்லிகை பூச்சரத்தில்,எந்தப்பூ, மணத்துக்கு காரணம்?

  படைத்தனர்,-மாதா, பிதா, தெய்வம்!
  படைப்பாளியாக்கினார் குரு!

  ஏகலைவன் கொடுத்த குருதட்சணையின் மதிப்பே,

  அக்கலைஞன், குரு அபிமான சாட்சி!

  அடிகளுக்கு அளவே இல்லை!
  எடுத்த கொள்கை முடிப்பது தான் நோக்கம்!

  ஏகாரத்தில் விளித்திடும் பாங்கு!
  சாகாக் கல்வி தருவதே நோக்கு!

  இது யாப்பிலக்கண” ஆசிரியப்பா” இல்லையப்பா!
  இது, நாம் கற்க உழைத்திடும் நம் “ஆசிரியரப்பா”!

  விண் தொட்ட “கூகுள் பிச்சை,
  காய்ந்திடாத, பச்சை நன்றி மதிப்புடன்,
  குரு கண்டு, பிறவியின்
  திரு அடைந்த பேரின்பம் காணீர்!

  வள்ளுவன் தந்த வார்த்தைகளில் சில:
  முகப்புண்ணை,கண்ணாக்கிடுவார் ஆசிரியர்!

  கல்வி கற்பித்து,உலகு இன்புறக்கண்டு, மகிழ்ந்திடுவார்,
  கற்பிப்பார்!

  ஆசிரியரிடம், ஏங்கித்தாழ்ந்து நின்று கல்வி கற்றிடுவார், மாணவர்!

  அத்துணை உயர்ந்தவர்,
  ஆசிரியர்!

  எனக்கு ஒரு ஐயம்!
  தீர்த்திடடடுவீர், ஐயன்மீர்!

  இது அமைதியான நீரோடையா?
  ஆர்ப்பரிக்கும், நீரருவியா?

  சந்தத்தோடு இயைந்த, சத்தம்,
  சத்தான கருத்து தரும் வித்தகர்கள் படைப்பு,
  இனிய, இதமான சாரல்,
  படையல்களை, உண்டு களித்து, உவகை அடைகிறோம்!

  அனைத்துக்கும் காரணி யான,
  இறைவனுக்கே, அனைத்துப்புகழும்.
  – பாரிஸா அன்சாரி.

 8. நிர்மலா says:

  அனைத்து கவிதைகளும் அற்புதம். எனது பள்ளி நாட்களை நினைவூட்ட, மீண்டும் அந்த நாட்கள் வராதா என்று ஏக்கம் உண்டானது.

  கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பின்னூட்டமே ஒரு கவிதையானது. அவருக்கும் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *