பெண்மை – கவிதை பதிவு 2
எப்படி எழுத..
எதை கொண்டுணர்த்த…
வானத்தை தாளாக்கி,
சமுத்திரத்தை மையாக்கி
உலகின் வாழ்நாளை மொத்தமாக
கடன் வாங்கிஎழுதினாலும் நிறையுமா…
இது இருபதாம் நூற்றாண்டு
இருந்தும் பெண்ணின்றி
இம்மண்ணிருக்குமா…
அதிகாலை எழுவதில்
எந்நாளும் வெற்றி..
அடுத்த நொடி சுறுசுறுப்பு
கடைசி வரை விறுவிறுப்பு
உமையாள் உமக்கே சாத்தியம்..
பெண்ணிற்கு ஆண் இணையல்ல
இது சத்தியம்..
சமைத்ததை அருந்திடும்
சர்வாதிகாரம் சமைந்த பொழுதே விட்டொழித்து
சமையலறையிலே வாழ்ந்து
சமைத்தே உண்கிறாள் சாகும் வரை..
அதிகாலை இருட்டிலும்
கொலுசும், வளையலும்
மேளதாளமிட்டும் நத்தையாய்
நகர்கிறாள் சத்தமின்றி
ஏனையர் உறக்கம் துறக்காதிருக்க..
மணவாளன்
இமை விரிய
குணவதி காத்திருக்கிறாள்
குவளை தேநீர் கையில் ஏந்தி..
மழலைகள் விழிதிறக்க
அடுத்தடுத்து அடுப்பாங்கரை..
பட்டியிலுட்டும் விட்டுவர
அடிக்கடி ஓடுகிறாள் அங்காடிக்கு
விடுபட்டதை விரைந்து சேர்க்க…
கணவன் கொடுப்பதை கொண்டு
இல்லத்தில் இருப்பதை கண்டு
இனித்திட வழங்கிடுவாள்
அறுசுவை பகிர்ந்தளித்து…
உணவருந்தும் வேளையிலும்
முகம் சுளித்ததில்லை இவள் மகன்
முற்றத்தில் உபாதைகள் கழிக்க
உடனடி பணிவிடை….
சில நேரங்களில் பெருந்தகைக்கும்…
உன்னத மனம் வேண்டும்..
தாயின் தனி குணம்…
இருக்கும் வேலையில் பசிமறக்க,
இல்லா வேளைதனில்பசி துறக்க,
இவள் நா ருசிப்பதும்
ரசிப்பதும் தன் மக்களுக்கு
தான் படைக்கும் பதார்த்தங்களை
சோதித்து பார்க்கையில் தான்..
உறவினர்களை உபசரித்து
மூத்தோரை அனுசரித்து
நண்பர்களை குறைத்து
குழந்தைகள், துணைவனை
மகிழ்வித்தும்
குற்றங்கள் குறைகளை பெரும்பாலும்
சுமப்பவள்குடும்ப விளக்கு அணையாதிருக்க…
மலையென வேலைகள்
குன்றாது குவிந்தும்
சோர்ந்து விடவில்லை..
தீர்ந்து விடாதா என சோடை போனதில்லை..
மறுநாளில் பாதியை
கடனாய் வாங்கி
முடித்தே உறங்கிடுவாள்
உழைக்கப் பிறந்தவளோ இவள்..
ஆபரணங்கள் வைக்கப்படும்
இல்லை விற்கப்படும்..
ஏமாற்றம் புதிதல்ல..
பொன்னகை இழந்தும்
புன்னகைப்பாள்
தன்னலமில்லாதுயர்
நீக்கும்
தூயவள்..
உள்ளொன்றும்
புறமொன்றுமில்லா
தும்பை பூவவள்..
சாத்திரங்கள் சுட்டெரித்தும்
ஆத்திரங்கள் அடக்கிடுவாள்..
சம்பிரதாய சமூகத்தில்சாம்
பிராணியாய் கரைந்திடுவாள்…
வெற்று சடங்குகளால் சற்றே முடங்கிடுவாள்..
இரும்பென திகழ்ந்தும்
கரும்பென ஒடிவாள், அதனால்
கசக்கி பிழிந்தாலும்
இனிப்பையே தந்திடுவாள்..
கோலம் பரப்புவது
படுக்கை மடிப்பது
வீட்டை பெருக்குவது
தரையை துடைப்பது தண்ணீர் நிரப்புவது
துவையல் அரைப்பது
சமையல் முடிப்பத
ுகுழந்தைகள் குளிப்பது
உணவை அளிப்பது
பள்ளி அனுப்புவது
திரும்ப அழைப்பது
அழுக்கை துவைப்பது
துவைத்ததை மடிப்பது
மடித்ததை அடுக்குவது
பாத்திரங்கள் துலக்குவது
படிக்கச் செய்வது
உறங்கிட வைப்பது
தினசரி வேலைகளில் சில..
சூரியனும் ஓய்வெடுக்கும்
சந்திரனும் தேய்ந்திருக்கும்
தொய்வில்லாமல் தொடர
சளைக்காமல் சலிக்காமல்
வலித்தாலும் நெளிக்காமல்
நித்தமும் முகம் சுளிக்காமல்
தட்டிக் கழிக்காமல்
தெளிவாய் முடிக்க
உன்னால் மட்டும் எப்படி பெண்ணே…?
தந்தையை விஞ்சி
தமையனை மிஞ்சி
கணவனுக்கு அஞ்சி
குழந்தையை கொஞ்சி
தனக்குள் கெஞ்சி
வாழ்ந்த வீடுவசிக்கும்
வீடுவாழப்போகும்
வீடுஎவரையும் எங்கும்
விட்டு விடுவது
மில்லைஎவரிடமும் எதிலும்
விட்டு கொடுப்பது
மில்லைசாதிக்கிறாள் சாமர்த்தியமாக…
பருவம் தொட்டால்
பகடையாகிறாள்..
நின்றால், நடந்தால்,
ஆடினால், ஓடினால்,
குனிந்தால், நிமிர்ந்தால்,
எந்நேரமும் எவ்விடமும்
எத்தனை சோதனைகள்…
இடைவிடாது ஆடைகளை சரிசெய்ய
இன்னுமோர் கை வேண்டும்..
வன்மம், வஞ்சகம்,
வக்கிரம், அக்கிரமம்,
தடுமாற்றம், தடமாற்றம்,
ஏமாற்றம், எதிர்பார்ப்பு
எல்லாம் கடந்து
வேதனைகள் சாதனைகளாவது
எல்லாம் விடியும்
என்பதை விட பெண்ணால்தான் முடியுமென்பதால் …
எங்கே இல்லை பெண்..?
விண்வெளியில் பறப்பதில்
விமானத்தை இயக்குவதில்
புகைவண்டி நகர்த்துவதில்
கனரக இயந்திரங்களை
கையாள்வதில்,
கடின சாகசங்கள் முடிப்பதில்
மருத்துவத்தில், விளையாட்டில்,
நாடாள்வதில், ஏன் எங்கும்
எதிலும் எல்லாம் பெண்…
மனோதிடம், பக்குவம்,
பகுத்தறிவு, நல்லெண்ணம்
சுயபுத்தி, சமயுத்தி
தன்னம்பிக்கை,தைரியம்,
எல்லாம் இருந்தும்
கோழையாக்கப்படுபவள்.
ஏழையாக இருந்தாலும்
எதையும் எதிர் கொள்வாள்..
எதிர் பார்த்து
ஏங்க மாட்டாள்…
பாசத்தை தைத்து
பண்பை விதைத்து
அன்பை நிறைத்து
அகிலத்தை காத்திடும்
விருட்சம் பெண்..
உதிரத்தை உணவாக்கி,
தன் பிஞ்சை
உயிராக்கிடுவாள்..
தன் நெஞ்சை திடமாக்கி தாயாராக தயாராவாள்…
திரும்புவோமோ மாட்டோமோ
விரும்பியே துணிந்திடுவாள்…
எவ்வலிமை ஆடவனும்
வெல்ல முடியுமா
பிரசவத்தை…
ஏன் பிரசவம் தெரியுமோ..
இன்னும் ஒர் உயிர்
தவமாய் பிறக்கலாம்…
இருக்கும் உயிர் சவமாய்
துறக்கலாம்….
கிடைத்த
ஒரே வாழ்வையும்
தனக்காய் வாழா
உன்னத உயிர்… பெண்..
உவமைகள்
உண்டு ஏராளம்..
இல்லை
நமக்குள் தாராளம்..
தேவதை,
தெய்வங்களை
கோவிலில்
தெருவில் தேடாதீர்கள்…
ஒவ்வொரு வீட்டிலும்
இருக்கிறார்கள்…
தாயாய்,
மகளாய்,
தமக்கையாய்,
தோழியாய்,
மனைவியாய்…
பெண்மையே
தலை வணங்குகிறேன்..
– வாவி.ச.சீனிவாசன், திருப்பூர்